விவசாயியை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம் எதிரில் சாலை மறியல்


விவசாயியை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம் எதிரில் சாலை மறியல்
x
தினத்தந்தி 28 April 2019 10:15 PM GMT (Updated: 28 April 2019 8:00 PM GMT)

விவசாயியை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி கோட்டூர் போலீஸ் நிலையம் எதிரில் சாலை மறியல் நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே திருவெண்டுதுறை தெற்கு தெருவை சேர்ந்தவர் கொல்லிமலை(வயது42). விவசாயி. இவரது குடும்பத்துக்கும், அதே தெருவை சேர்ந்த சக்திவேல்(41) குடும்பத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இந்தநிலையில் கொல்லிமலையை முன்விரோதம் காரணமாக சக்திவேல் மற்றும் அவருடைய உறவினர்கள் ராஜேஷ், ராஜேஷ்குமார் ஆகியோர் சேர்ந்து தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கொல்லிமலை கோட்டூர் போலீசில் புகார் கொடுத்தார்.

சாலை மறியல்

இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை மட்டும் கைது செய்தனர். ராஜேஷ், ராஜேஷ் குமாரை கைது செய்ய வில்லை. ஆனால் இந்த வழக்கில் சக்திவேலின் உறவினர்களையும் கைது செய்ய வலியுறுத்தி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் தலைமையில், கோட்டூர் போலீஸ் நிலையம் எதிரில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்.கார்த்திக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story