தஞ்சை அருகே கொத்தடிமையாக ஆடு மேய்த்த சிறுவன் மீட்பு ராமநாதபுரத்தை சேர்ந்தவர் கைது


தஞ்சை அருகே கொத்தடிமையாக ஆடு மேய்த்த சிறுவன் மீட்பு ராமநாதபுரத்தை சேர்ந்தவர் கைது
x
தினத்தந்தி 28 April 2019 10:15 PM GMT (Updated: 28 April 2019 8:17 PM GMT)

தஞ்சை அருகே கொத்தடிமையாக ஆடுமேய்த்த சிறுவன் மீட்கப்பட்டான். இது தொடர்பாக ராமநாதபுரத்தை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஆம்பலாப்பட்டு ஏரிக்கரை பகுதியில் 10 வயது சிறுவன் ஆடு மேய்ப்பதாகவும், அந்த சிறுவனை ஒருவர் அடித்ததாகவும் தஞ்சையில் உள்ள சைல்டு லைன் அமைப்பு 1098 என்ற எண்ணுக்கு புகார் வந்தது. இதையடுத்து சைல்டு லைன் இயக்குனர் பாத்திமாராஜ் உத்தரவின் பேரில் ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ், சத்யராஜ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடராஜன், ஒரத்தநாடு தாசில்தார் அருள்ராஜ், துணைதாசில்தார் அகத்தியன், வருவாய் ஆய்வாளர் சுரேஷ், கிராம நிர்வாக அதிகாரிகள் கனகவல்லி, செல்வராஜ், ஒரத்தநாடு போலீஸ் ஏட்டு சதீஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அப்போது அங்கு ஆடு மேய்த்துக்கொண்டு இருந்த கடலூர் மாவட்டம் பண்ருட்டி சேந்தங்குளத்தை சேர்ந்த 10 வயது சிறுவனை பிடித்து. விசாரணை நடத்திய போது, அவனுடைய தந்தை 1 ஆண்டுக்கு முன்பு இறந்ததாகவும், தாயார் ரூ.10 ஆயிரம் வாங்கிக்கொண்டு தன்னை ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை அடுத்த அழச்சிகுளத்தை சேர்ந்த ஜெயக்குமார் (வயது39) என்பவரிடம் ஆடு மேய்க்க வேலைக்கு அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளான்.

தினமும் 120 ஆடுகளை மேய்த்து வந்த அந்த சிறுவன், இரவு ஆடுகளுடனேயே தங்கி உள்ளான். மேலும் 1 ஆண்டு ஆகியும் சிறுவனுக்கு சரிவர உணவு கொடுக்காமலும், விடுப்பு கொடுக்காமலும் கொத்தடிமையாக நடத்தப்பட்டு உள்ளான். இதையடுத்து அந்த சிறுவனை மீட்டு தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் சுரேஷிடம் ஒப்படைத்தனர். அவர் ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்கி, சிறுவனுக்கு விடுதலைச்சான்று வழங்கி உத்தரவிட்டார்.

மேலும் இது குறித்து பாப்பாநாடு போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story