கரூர் அருகே பட்டாசு ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்


கரூர் அருகே பட்டாசு ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
x
தினத்தந்தி 29 April 2019 4:15 AM IST (Updated: 29 April 2019 2:45 AM IST)
t-max-icont-min-icon

கரூர் அருகே பட்டாசு ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துகுள்ளானது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

வெள்ளியணை,

விருதுநகர் மாவட்டம், சிவகாசியிலிருந்து பட்டாசுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கரூர் வழியாக மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு திருமலசை பகுதியை சேர்ந்த மகேந்திரன் (வயது 43) என்பவர் ஒட்டி வந்தார். இந்த நிலையில் நேற்று காலை கரூர்– திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கரூர் அருகே உள்ள காக்காவாடி பகுதியில் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி பட்டாசுகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் லாரி டிரைவர் மகேந்திரன் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் வெள்ளியணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் லாரி டிரைவர் மகேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வெள்ளியணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து அந்த கவிழ்ந்த லாரியில் இருந்து பட்டாசுகள் மாற்றுலாரியில் ஏற்றப்பட்டு மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story