சத்தி வனப்பகுதியில் கடும் வறட்சி: தண்ணீரை தேடி பவானிசாகர் அணைக்கு படையெடுக்கும் யானைகள்
சத்தியமங்கலம் வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் தண்ணீரை தேடி பவானிசாகர் அணைக்கு யானைகள் கூட்டம், கூட்டமாக படையெடுக்கின்றன.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசிக்கின்றன. வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யவில்லை. இதனால் மரம், செடி கொடிகள் காய்ந்து விட்டன. காட்டுக்குள் உள்ள ஓடைகள், குளங்கள், வனக்குட்டைகள், தடுப்பணைகளும் வற்றிவிட்டன.
இதனால் யானை உள்ளிட்ட விலங்குகள் தீவனம் மற்றும் குடிநீர் கிடைக்காமல் தவிக்கின்றன. வனத்துறையினர் ஆங்காங்கே தற்காலிகமாக தொட்டிகள் அமைத்து அதில் தண்ணீர் நிரப்பினாலும் வன விலங்குகளின் தாகம் தீர்க்க இந்த தண்ணீர் போதுமானதாக இல்லை.
இந்த நிலையில் பவானிசாகர் அணை நீர் தேக்கத்தில் ஓரளவு தண்ணீர் உள்ளது. இதனால் அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து யானைகள், மாலை நேரங்களில் தண்ணீர் குடிப்பதற்காக பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதிக்கு கூட்டம், கூட்டமாக படையெடுத்து வருகின்றன.
நேற்று முன்தினம் மாலை 25–க்கும் மேற்பட்ட யானைகள் குட்டிகளுடன் காராட்சிக்கொரை வனப்பகுதியில் இருந்து வெளியேறி பவானிசாகர் அணையின் மேல் பகுதியில் உள்ள தார் சாலையை கடந்து அணையின் நீர்தேக்க பகுதிக்கு தண்ணீர் குடிக்க வரிசையாக வந்தன. இதனால் அந்த பகுதியில் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளார்கள்.