சரக்கு வாகனத்தில் கடத்த முயன்ற 31 குவிண்டால் ரேஷன் அரிசி பறிமுதல்


சரக்கு வாகனத்தில் கடத்த முயன்ற 31 குவிண்டால் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 30 April 2019 3:48 AM IST (Updated: 30 April 2019 3:48 AM IST)
t-max-icont-min-icon

சரக்கு வாகனத்தில் கடத்த முயன்ற 31 குவிண்டால் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கார்வார், 

உத்தரகன்னடா மாவட்ட தலைநகர் கார்வார் அருகே பார்வர்கா கிராமத்தில் உள்ள கணேஷ் நகரில் முகமது யூசுப் அமீது என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் சட்ட விரோதமாக ரேஷன் அரிசியை பதுக்கி கடத்தி செல்வதாக கார்வார் தாசில்தார் என்.பி.பட்டீலிடம் புகார் செய்தனர்.

இதைதொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் உணவு வழங்கல் துறை ஆய்வாளர் பிரவீன், வருவாய் ஆய்வாளர் கணபதி மேத்ரி ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள், முகமது யூசுப் அமீதுக்கு சொந்தமான கட்டிடத்தில் சோதனை நடத்த சென்றனர்.

அப்போது அந்த கட்டிடத்தில் இருந்து ஒரு சரக்கு வாகனத்தில் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு டிரைவர் ஒருவர் புறப்பட்டு செல்ல தயாராக இருந்தார். அங்கு அதிகாரிகள் வருவதை கண்டதும், சரக்கு வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு அவர் தப்பி ஓடிவிட்டார்.

இதைதொடர்ந்து அதிகாரிகள் சரக்கு வாகனத்தில் சோதனை நடத்தினர். அப்போது அதில் சாக்குப்பைகளில் கர்நாடக அரசின் அன்னபாக்ய திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. அதுபோல் முகமது யூசுப் அமீதுவின் கட்டிடத்தில் சில ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தன. மொத்தம் 50 கிலோ எடை கொண்ட 60 பைகளில் மொத்தம் 31 குவிண்டால் ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து ரேஷன் அரிசியுடன் சரக்கு வாகனத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுதொடர்பாக அதிகாரிகள், பார்வர்கா போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரேஷன் அரிசியை கடத்த முயன்று தப்பி ஓடிய டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த கட்டிடத்தின் உரிமையாளரான முகமது யூசுப் அமீதுவையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story