காங்கேயம் அருகே கல்குவாரிக்கு அனுமதி கொடுக்க வேண்டாம் - பொதுமக்கள் கோரிக்கை


காங்கேயம் அருகே கல்குவாரிக்கு அனுமதி கொடுக்க வேண்டாம் - பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 30 April 2019 4:28 AM IST (Updated: 30 April 2019 4:28 AM IST)
t-max-icont-min-icon

காங்கேயம் அருகே கல்குவாரிக்கு அனுமதி கொடுக்க வேண்டாம் என்று கலெக்டரிடம் பொது மக்கள் மனு கொடுத்தனர்.

திருப்பூர்,

காங்கேயம் தாலுகா எல்லப்பாளையம் புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட வஞ்சிப்பாளையம், இந்திராகாலனி, கரியாக்கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர்கள் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமியிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

வஞ்சிப்பாளையத்தில் கிரானைட் மற்றும் கல்குவாரி அமைக்க முயற்சி நடைபெற்று வருகிறது. குவாரி அமைக்கும் பகுதியில் உள்ள இந்திரா காலனியில் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடுகள் கட்டி குடியிருந்து வருகிறார்கள். அங்கு ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும், காவிரி குடிநீர் தொட்டியும் உள்ளன. கிரானைட் வெட்டி எடுக்க வெடி வைக்கும்போது வீடுகள், நீர்த்தேக்க தொட்டிகள் சேதமடையும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட இடத்துக்கு அருகில் 500 ஏக்கர் பாசன வசதி அளிக்கும் பிரதான பி.ஏ.பி. கால்வாய் செல்கிறது. கல்குவாரிகளில் வெடி வைக்கும்போது பி.ஏ.பி. கால்வாய் முழுவதுமாக சேதமடையும். மேலும் வைரன் குட்டை, கசிவுநீர் குட்டையும் பாதிப்படையும்.

கிரானைட் மற்றும் கல்குவாரி பகுதியை சுற்றிலும் விவசாய விளைநிலங்கள் உள்ளன. விவசாயத்தை நம்பியே இந்த பகுதியில் உள்ளவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். கல்குவாரியால் விவசாயம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குவாரிக்கு சிறிது தூரத்தில் நர்சரி பள்ளியும் உள்ளது.

கிரானைட் மற்றும் கல்குவாரி செயல்பாட்டுக்கு வரும்போது விவசாயம், குடியிருப்பு, கால்வாய் மற்றும் பள்ளி என பல தரப்பினர் பாதிப்புக்குள்ளாகும். எனவே இந்த கிரானைட் மற்றும் கல்குவாரிக்கு அனுமதி கொடுக்க வேண்டாம். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.


Next Story