மாட்டுங்காவில் பல்பொருள் அங்காடியில் பயங்கர தீ : ஏராளமான பொருட்கள் எரிந்து நாசம்
மாட்டுங்காவில் உள்ள பல்பொருள் அங்காடியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமாகின.
மும்பை,
மும்பை மாட்டுங்கா மேற்கு ரெயில் நிலையம் அருகில் பிரபல பல்பொருள் அங்காடி (பிக் பஜார்) உள்ளது. தேர்தல் காரணமாக நேற்று இந்த பல்பொருள் அங்காடி மூடப்பட்டு இருந்தது. இந்த நிலையில், மாலை 4.45 மணியளவில் பல்பொருள் அங்காடிக்குள் இருந்து குபுகுபுவென கரும்புகை வெளியேறியது.
அடுத்த சில நொடிகளில் பல்பொருள் அங்காடி பயங்கரமாக தீப்பற்றி எரிந்தது. தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் நாலாபுறமும் சுற்றி நின்றபடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க போராடினார்கள். ஆனால் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் திணறினார்கள்.
தொடர்ந்து தீ வேகமாக பரவி எரிந்து கொண்டே இருந்ததால் தீயணைப்பு பணி கடும் சவாலாக மாறியது. இரவு 7 மணிக்கு பின்னரும் தீயணைப்பு பணி தொடர்ந்து நடந்தது.
தீ விபத்து காரணமாக அங்குள்ள சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. தீ விபத்து பற்றி அறிந்ததும் அந்த பகுதியில் ஏராளமானோர் திரண்டு விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. பல்பொருள் அங்காடியில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்குள்ள ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமாகி விட்டன.
இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. தீ விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story