தவுட்டுப்பாளையம் மகா மாரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்


தவுட்டுப்பாளையம் மகா மாரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
x
தினத்தந்தி 30 April 2019 10:30 PM GMT (Updated: 30 April 2019 7:32 PM GMT)

தவுட்டுப்பாளையம் மகா மாரியம்மன் கோவிலில் நடந்த திருவிழாவையொட்டி பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நொய்யல்,

கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு கடந்த 14-ந் தேதி சுற்றுவட்டார பகுதி பக்தர்கள் காவிரி ஆற்றிற்கு சென்று புனித நீராடி தீர்த்த குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். அதனை தொடர்ந்து பக்தர்கள் தீர்த்த குடங்களுடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் மகா மாரியம்மனுக்கு புனிதநீர் பால், தயிர், பன்னீர், இளநீர், விபூதி, திருமஞ்சனம், சந்தனம், மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்தனர். பின்னர் பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு, ஆராதனை நடைபெற்றது.

இதில், சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கடந்த 21-ம் தேதி ஞாயிற்றுகிழமை கம்பம் நடுதல் நிகழ்ச்சியும் கடந்த 28-ந் தேதி வடிசோறு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நேற்று முன்தினம் தீ குண்டத்தில் இறங்கும் பக்தர்கள் காவிரி ஆற்றிற்கு சென்று புனித நீராடி ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் ஏராளமான ஆண்கள் கோவில் முன்பு தயாராக இருந்த அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நேற்று மாலை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் மகா மாரியம்மன் முன்பு பொங்கல், மாவிளக்கு வைத்து வழிபட்டனர். இரவு வாணவேடிக்கை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இன்று (புதன்கிழமை) கம்பம் பிடுங்கி ஆற்றிற்கு செல்லும் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து மஞ்சள் நீராடல் மற்றும் மகா மாரியம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடை பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர் வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Next Story