இரவு நேரங்களில் தீவிரமாக ரோந்துப்பணி மேற்கொள்ள வேண்டும் - நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு போலீசாருக்கு சூப்பிரண்டு அறிவுரை


இரவு நேரங்களில் தீவிரமாக ரோந்துப்பணி மேற்கொள்ள வேண்டும் - நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு போலீசாருக்கு சூப்பிரண்டு அறிவுரை
x
தினத்தந்தி 30 April 2019 11:00 PM GMT (Updated: 2019-05-01T02:01:35+05:30)

இரவு நேரங்களில் தீவிரமாக ரோந்துப்பணி மேற்கொள்ள வேண்டும் என்று நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுரை கூறினார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு போலீசார் பயன்படுத்தி வரும் வாகனங்களை நேற்று மாவட்ட காவல்துறை அணிவகுப்பு மைதானத்திற்கு வரவழைத்து அந்த வாகனங்களின் பராமரிப்பு குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு போலீசாருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி பேசியதாவது:-

பணிபுரியும் இடங்களில் சாலை முழுவதையும் நன்கு தெரிந்துகொண்டு அனைத்து பகுதிகளிலும் ரோந்து செல்ல வேண்டும். குறிப்பாக இரவு நேரங்களில் வாகனங்களில் சைரனை பயன்படுத்தி தீவிரமாக ரோந்துப்பணி மேற்கொள்ள வேண்டும்.

விபத்து மற்றும் அசம்பாவிதங்கள் நடந்தால் உடனே அங்கு சென்று பார்வையிட்டு உடனடி நடவடிக்கை எடுப்பதுடன் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். விபத்து நடந்த இடத்திற்கு சென்றதும் விபத்துக்குள்ளான வாகனம் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்திவிட்டு போக்குவரத்தை மாற்றுப்பாதையில் திருப்பிவிட வேண்டும்.

மேலும் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை நெடுஞ்சாலையில் உள்ள அவசர விபத்து நிவாரண மையத்தை தொடர்புகொண்டு அவர்கள் உதவியுடன் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். தேவைப்படும்போது தனியார் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து அதன் மூலம் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கலாம். ஆம்புலன்ஸ் வர தாமதமானால் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களை பயன்படுத்தலாம்.

தனிப்பிரிவு அலுவலகம் மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து சந்தேக வாகனங்கள் மற்றும் கடத்தல் வாகனங்கள் பற்றி தகவல் தெரிவிக்கும்போது உடனே தீவிர வாகன சோதனை நடத்தப்பட வேண்டும். சோதனையில் மேற்கண்ட வாகனங்கள் பிடிபட்டால் அவற்றை கைப்பற்றி காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், தனிப்பிரிவு அலுவலகத்திற்கும் தெரியப்படுத்தி அவர்களது உத்தரவின்படி செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது விழுப்புரம் ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் நெடுஞ்செழியன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story