தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம் கலெக்டர் ஆனந்த் தகவல்


தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம் கலெக்டர் ஆனந்த் தகவல்
x
தினத்தந்தி 1 May 2019 4:15 AM IST (Updated: 1 May 2019 2:05 AM IST)
t-max-icont-min-icon

தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம் என திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் கூறி உள்ளார். இதுகுறித்து அவர் ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.

திருவாரூர்,

வெள்ளம், புயல், வறட்சி, பூச்சி நோய் தாக்குதல், எதிர்பாராத தீ விபத்து, நில அதிர்வு, ஆழிப்பேரலை ஆகியவற்றால் இழப்பு ஏற்படுவதை தடுக்க திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம்.

இயற்கை சீற்றங்களால் தென்னை மரங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டாலோ அல்லது முற்றிலும் பலன் கொடுக்காத நிலை ஏற்பட்டாலோ இத்திட்டத்தில் இழப்பீடு வழங்கப்படும். இதில் இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் மற்றும் வேளாண்துறை அதிகாரிகளின் முடிவே இறுதியானது.

இழப்பீடு

ஆனால் வேண்டுமென்றே பராமரிக்கப்படாமல் விடப்படும் தோட்டங்கள், மனிதன் மற்றும் மிருகங்களால் சேதம் ஏற்படுத்தப்படும் தோட்டங்களில் உள்ள மரங்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படமாட்டாது.

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விவசாயிகள் தென்னையை தனிப்பயிராகவோ, ஊடுபயிராகவோ, வயல் வரப்பில் வரிசையாகவோ, வீட்டு தோட்டத்திலோ சாகுபடி செய்து இருக்க வேண்டும். குறைந்தபட்சம் பலன்தரக்கூடிய 5 மரங்களையாவது சாகுபடி செய்திருக்க வேண்டும். வளமான, ஆண்டுக்கு 30 காய்களுக்குமேல் மகசூல் தரக்கூடிய மரங்களை இத்திட்டத்தில் சேர்க்கலாம்.

தேவைப்பட்டால் ஆய்வு

காப்பீடு திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள தென்னை மரங்களின் எண்ணிக்கை, வயது, பராமரிப்பு முறை மற்றும் தற்போதைய நிலை பற்றிய சுய உறுதி முன்மொழிவு அளிக்க வேண்டும். காப்பீடு செய்துள்ள காலத்தில் காப்பீடு நிறுவனம் தேவைப்பட்டால் எப்போது வேண்டுமானாலும் தென்னை மரங்களை ஆய்வு செய்யும்.

விவசாயிகள் தவறான தகவல்களை அளித்திருந்தால் காப்பீடு நிராகரிக்கப்படும். இந்த திட்டத்தில் சேர தென்னை விவசாயிகள் தங்களுக்கு அருகே உள்ள வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி முன்மொழிவு படிவத்தை பெற்று பூர்த்தி செய்து பிரீமிய தொகைக்கான வங்கி வரைவோலை, சிட்டா மற்றும் அடங்கலுடன் இணைத்து வேளாண்மைத்துறை அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

பிரீமிய தொகை

பிரீமிய தொகையில் 50 சதவீதத்தை மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியமும், 25 சதவீதத்தை மாநில அரசும் ஏற்றுக்கொள்கின்றன. மீதி 25 சதவீதத்தை மட்டும் விவசாயிகள் செலுத்தினால் போதும்.காப்பீடு செய்யப்பட்ட தென்னை மரங்களில் இழப்பு ஏற்பட்டால் காப்பீடு செய்த விவசாயி 15 நாட்களுக்குள் காப்பீடு நிறுவனத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story