வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரக நினைவு தினம் அனுசரிப்பு


வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரக நினைவு தினம் அனுசரிப்பு
x
தினத்தந்தி 30 April 2019 10:45 PM GMT (Updated: 2019-05-01T02:12:16+05:30)

வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரக நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அகஸ்தியன்பள்ளியில் உள்ள நினைவு தூணில் சுதந்திர போராட்ட தியாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கடந்த 1930-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ந் தேதி ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து உப்பு சத்தியாகிரகம் நடந்தது. இதில் ராஜாஜி, சர்தார் வேதரெத்தினம் ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டு உப்பு அள்ளி கைது ஆனார்கள்.

இந்திய சுதந்திர போராட்டத்தில் பெரும் எழுச்சியை ஏற்படுத்திய இந்த நிகழ்வை நினைவுகூரும் விதமாக வேதாரண்யம் அருகே அகஸ்தியன்பள்ளியில் உப்பு சத்தியாகிரக நினைவு தூண் அமைக்கப்பட்டு உள்ளது. உப்பு சத்தியாகிரக நினைவு தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 30-ந் தேதி வேதாரண்யத்தில் அனுசரிக்கப்படுவது வழக்கம்.

ஊர்வலம்

அதன்படி இந்த ஆண்டு உப்பு சத்தியாகிரக நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதன் தொடக்கமாக சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் வேதாரண்யத்தில் இருந்து அகஸ்தியன்பள்ளி வரை ஊர்வலமாக சென்றனர். வேதாரண்யம் வடக்குவீதியில் உள்ள உப்புசத்தியாகிரக நினைவு கட்டிடத்தில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது.

5 கிலோ மீட்டர் தூரம் நடந்த இந்த ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் தேச பக்தி பாடல்களை பாடியபடி சென்றனர். அகஸ்தியன்பள்ளியில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு தூணில் ஊர்வலம் நிறைவடைந்தது. ஊர்வலத்தை தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் உப்பு சத்தியாகிரக நினைவு தூணில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். பின்னர் அங்கு உப்பு அள்ளப்பட்டது.

உப்பு அள்ளினர்

இந்த நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட தியாகி சாட்டியக்குடி சம்பந்தம்பிள்ளை, முன்னாள் எம்.பி. ராஜேந் திரன், சர்தார் வேதரத்தினத்தின் பேரன்கள் வேதரத்தினம், கேடிலியப்பன், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா, உப்புசத்தியாகிரக நினைவு கமிட்டி பொதுச்செயலாளர் சக்தி.செல்வ கணபதி, பேரூராட்சி முன்னாள் தலைவர் சங்கரவடிவேலு, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் கனகராஜ் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு ‘வந்தே மாதரம்’ என்ற கோஷத்தை எழுப்பியபடி உப்பு அள்ளினர். 

Next Story