பண்ணாரி அருகே வாகனத்தில் அடிபட்டு சிறுத்தை குட்டி சாவு


பண்ணாரி அருகே வாகனத்தில் அடிபட்டு சிறுத்தை குட்டி சாவு
x
தினத்தந்தி 1 May 2019 4:15 AM IST (Updated: 1 May 2019 3:07 AM IST)
t-max-icont-min-icon

பண்ணாரி அருகே வாகனத்தில் அடிபட்டு சிறுத்தை குட்டி இறந்தது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பவானிசாகர் வனப்பகுதியில் ஏராளமான புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக பவானிசாகர் வனப்பகுதியில் மழை பெய்யவில்லை. இதனால் காட்டாறுகள் வறண்டு கிடக்கின்றன.

வனக்குட்டைகள், குளங்கள் வற்றிவிட்டன. செயற்கை குட்டைகளில் வனத்துறையினர் தண்ணீர் நிரப்பினாலும், அது விலங்குகளுக்கு போதுமானதாக இல்லை. இதனால் யானை, சிறுத்தை, மான் போன்றவைகள் தண்ணீரை தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறுகின்றன.

பவானிசாகர் வனப்பகுதிக்கு உட்பட்ட பண்ணாரி காட்டு வழியாக திண்டுக்கல்–மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தண்ணீரை தேடி இரவு நேரங்களில் இந்த ரோட்டை கடக்கும் விலங்குகள் அந்த வழியாக வரும் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறுகின்றன.

இந்தநிலையில் நேற்று காலை சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி செல்லும் வழியில், பண்ணாரிக்கு சுமார் 1 கிலோ மீட்டர் முன்னதாக, ஒரு ஓடை பாலத்துக்கு அடியில் சிறுத்தை குட்டி ஒன்று காயங்களுடன் இறந்து கிடந்தது.

அந்த வழியாக சென்றவர்கள் அதை பார்த்து உடனே வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்கள்.

தகவல் கிடைத்ததும், சத்தி புலிகள் காப்பக துணை இயக்குனர் அருண்லால், வனத்துறை ஊழியர்கள் மற்றும் கால்நடை டாக்டருடன் அங்கு சென்றார். உடனே டாக்டர், சிறுத்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். இதுபற்றி அவர் கூறும்போது, ‘இறந்து கிடந்தது சுமார் 1½ வயதுடைய ஆண் சிறுத்தை குட்டியாகும். நேற்று முன்தினம் இரவு தாய் சிறுத்தையுடன் தேசிய நெடுஞ்சாலையை இந்த குட்டி கடந்திருக்கலாம். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனம் மோதி சிறுத்தை குட்டி இறந்திருக்கலாம்’ என்றார்.

அதன்பிறகு வனப்பகுதியில் குழி தோண்டி சிறுத்தையின் உடல் புதைக்கப்பட்டது. சிறுத்தை இறந்து கிடந்த இடத்துக்கு மீண்டும் தாய் சிறுத்தை வரலாம். அதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் கூறினார்கள்.

1 More update

Related Tags :
Next Story