தாளவாடி பகுதியில் பலத்த சூறாவளிக்காற்று; 25 ஆயிரம் வாழைகள் சாய்ந்தன விவசாயிகள் வேதனை


தாளவாடி பகுதியில் பலத்த சூறாவளிக்காற்று; 25 ஆயிரம் வாழைகள் சாய்ந்தன விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 30 April 2019 11:00 PM GMT (Updated: 2019-05-01T03:07:12+05:30)

தாளவாடி பகுதியில் வீசிய பலத்த சூறாவளிக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 25 ஆயிரம் வாழைகள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தார்கள்

தாளவாடி,

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சூறாவளிக்காற்று வீசியது. அதன்பின்னர் இரவு 10 மணியில் இருந்து 10.20 மணி வரை பலத்த சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது.

இந்த சூறாவளிக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தாளவாடி அருகே உள்ள கெட்டவாடியை சேர்ந்த விவசாயிகள், தோட்டங்களில் பயிரிட்டு இருந்த சுமார் 25 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்தன.

இதேபோல் தாளவாடி அருகே உள்ள பனக்ஹள்ளியை சேர்ந்த விவசாயி ஆர்வசெட்டி என்பவருடைய தோட்டத்தில் இருந்த 2,500 வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன. 1000 பாக்கு மரங்கள் முறிந்தன. 10 தென்னை மரங்கள் சேதமடைந்தன.

மேலும் தோட்டத்தின் அருகே அமைக்கப்பட்டு இருந்த 10 மின்கம்பங்களும் சாய்ந்தன. இது தவிர அந்த பகுதியில் மேலும் சிலரின் தோட்டங்களில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாழைகள் நாசமடைந்தன.

இதுபற்றி பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறும்போது, ‘பருவமழை எங்களை ஏமாற்றியது. தண்ணீர் கிடைக்காமல் வறட்சி ஏற்பட்டபோதும் மிகவும் சிரமப்பட்டு வாழைகளை காப்பாற்றினோம். ஆனால் சூறாவளிக்காற்று அனைத்து வாழைகளையும் நாசமாக்கிவிட்டது. இதுபற்றி வேளாண்மை துறை அதிகாரிகளிடம் கூறினால் வந்து பார்த்துவிட்டு ஒரு வாழைக்கு 5 அல்லது 10 ரூபாய் நஷ்ட ஈடாக தருகிறார்கள். ஒரு வாழை மரம் குலை தள்ளும் வரை அதற்கு 100 ரூபாய் செலவிடவேண்டும். அதனால் அதிகாரிகள் சேதத்தை பார்வையிட்டு உரிய இழப்பீட்டை பெற்றுத்தரவேண்டும்’ என்று வேதனையுடன் கூறினார்கள்.


Next Story