குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாவட்ட தலைநகரங்களில் உதவி மையம் : மாநில அரசின் தலைமை செயலாளர் பேட்டி


குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாவட்ட தலைநகரங்களில் உதவி மையம் : மாநில அரசின் தலைமை செயலாளர் பேட்டி
x
தினத்தந்தி 30 April 2019 10:01 PM GMT (Updated: 2019-05-01T03:31:24+05:30)

கர்நாடகத்தில் வறட்சி பாதித்த பகுதிகளில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாவட்ட தலைநகரங்களில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளதாக தலைமை செயலாளர் கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக அரசின் தலைமை செயலாளர் விஜயபாஸ்கர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் நிலவி வரும் வறட்சி குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினேன். கடந்த 27-ந் தேதி மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரிகளின் கூட்டத்தை நடத்தி, வறட்சி பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டேன்.

வறட்சி பாதித்த பகுதிகளில் கிராமங்களுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 26 மாவட்டங்களில் 1,205 கிராமங்களுக்கு 1,893 டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

நகர பகுதிகளில் 303 வார்டுகளில் 214 டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. வறட்சி பாதித்த பகுதிகளில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் பொருட்டு மாவட்ட தலைநகரங்களில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. அந்த மையங்கள் 24 மணி நேரமும் செயல்படுகிறது.

ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் மாவட்ட அளவிலான ஒரு அதிகாரியை நியமித்து, குடிநீர், கால்நடைகளுக்கு தீவனம், வேலை வாய்ப்பு ஏற்படுத்துதல் போன்ற பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாநிலத்தில் தற்போது 11 கோசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. அங்கு 11 ஆயிரத்து 120 கால்நடைகள் இருக்கின்றன. அவற்றுக்காக 128 தீவன வங்கிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தீவனங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது மாநிலத்தில் 63.60 லட்சம் டன் தீவனம் இருப்பு உள்ளது. இது அடுத்த 14 வாரங்களுக்கு போதுமானதாக இருக்கும்.

பசுமை தீவனத்தை உற்பத்தி செய்ய கால்நடைத்துறைக்கு ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் 53.39 லட்சம் டன் பசுமை தீவனம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. முன்எச்சரிக்கை நடவடிக்கையாக குடகு மற்றும் தட்சிண கன்னடா ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுக்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இயற்கை பேரிடர் நிவாரண பணிகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.682 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர்களின் வங்கி கணக்கில் ரூ.726 கோடி கையிருப்பு உள்ளது.

இவ்வாறு விஜயபாஸ்கர் கூறினார்.


Next Story