கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு வெளியீடு : 2 மாணவிகள் முதலிடம் பிடித்து சாதனை


கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு வெளியீடு : 2 மாணவிகள் முதலிடம் பிடித்து சாதனை
x
தினத்தந்தி 30 April 2019 10:54 PM GMT (Updated: 30 April 2019 10:54 PM GMT)

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் 2 மாணவிகள் 625-க்கு 625 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். இந்த தேர்வில் ஒட்டுமொத்தமாக 73.70 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 4-ந்தேதி வரை நடந்தது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 8 லட்சத்து 41 ஆயிரத்து 666 மாணவ-மாணவிகள் எழுதினர். இதற்காக 2,847 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் வினாத்தாள்கள் திருத்தும் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து ஏப்ரல் 30-ந்தேதி (அதாவது நேற்று) எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி கர்நாடக அரசின் கல்வித்துறை முதன்மை செயலாளர் உமாசங்கர் பெங்களூருவில் நேற்று, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 4-ந் தேதி வரை நடைபெற்றது. 228 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்றன. இந்த பணி கடந்த ஏப்ரல் மாதம் 10-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடைபெற்றது. இந்த பொதுத்தேர்வில் 73.70 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்தனர்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், தேர்ச்சி சதவீதத்தில் நடப்பாண்டு 1.97 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 71.93 சதவீதம் ஆகும். நடப்பாண்டு தேர்வு முடிவில், மாணவர்கள் 68.46 சதவீதம் பேரும், மாணவிகள் 79.59 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பெங்களூரு அத்திப்பள்ளி பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவி ஸ்ருஜனா, உத்தரகன்னடா மாவட்டம் குமட்டா தாலுகாவை சேர்ந்த தனியார் பள்ளி மாணவி நாகாஞ்சலி ஆகிய 2 பேரும் 625-க்கு 625 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். 11 பேர் 624 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடமும், 19 பேர் 623 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடமும் பெற்றனர்.

39 பேர் 622 மதிப்பெண்களும், 43 பேர் 621 மதிப்பெண்களும், 56 பேர் 620 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்தனர். கன்னட மொழி பாடத்தில் 8,620 பேர் 125-க்கு 125 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்தனர். கணிதத்தில் 1,626 பேரும், அறிவியலில் 226 பேரும், சமூக அறிவியலில் 3,141 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

நகர்ப்புறங்களில் 70.05 சதவீதம் பேரும், கிராமங்களில 76.67 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் மொழி வழியில் படித்தவர்களில் மொத்தம் 122 பேர் தேர்வு எழுதினர். அதில் 64 பேர் தேர்ச்சி அடைந்தனர். தேர்ச்சி சதவீதம் 52.46 ஆகும்.

கர்நாடகத்தில் 593 அரசு பள்ளிகள், 130 அரசு உதவி பெறும் பள்ளிகள், 903 தனியார் பள்ளிகள் என மொத்தம் 1,626 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது. 9 அரசு உதவி பெறும் பள்ளிகள், 37 தனியார் பள்ளிகள் என மொத்தம் 46 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. அதாவது அந்த பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் பூஜ்ஜியம் ஆகும்.

தனித்தேர்வர்களில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் 28 பேர் இந்த தேர்வு எழுதினர். அவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. மனநிலை பாதிக்கப்பட்ட மாணவர்களில் 40.63 சதவீதம் பேரும், வாய்பேச முடியாதவர்கள் 87.60 சதவீதம் பேரும், காதுகேளாதோர்களில் 65.03 சதவீதம் பேரும், மாற்றுத்திறனாளிகள் 69.31 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர்.

விடைத்தாள் நகல் தேவைப்படுபவர்கள் வருகிற 2-ந் தேதி (நாளை) முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 13-ந் தேதி ஆகும். விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் பணி வருகிற 6-ந் தேதி தொடங்கி 17-ந் தேதி வரை நடக்கிறது.

எஸ்.எஸ்.எல்.சி. துணைதேர்வு ஜூன் மாதம் 21-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை நடைபெறும். இந்த ேதர்வில் தோல்வி அடைந்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள், 2-ந் தேதி (நாளை) முதல் ஆன்லைனில் தங்களின் விவரங்களை பதிவிட வேண்டும். இதற்கு வருகிற 10-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

அதன் பிறகு 15-ந் தேதி வரை ரூ.200 அபராதத்துடன் விவரங்களை பதிவேற்ற வேண்டும். 16-ந் தேதி முதல் ‘ெசலான்’ (செலுத்து சீட்டு) வங்கிகளில் வழங்க வேண்டும். வங்கிகளில் கட்டணத்தை செலுத்தியதற்கான ‘ெசலான்’ சீட்டை 21-ந் தேதிக்குள் தேர்வுத்துறையில் வழங்க வேண்டும்.

இவ்வாறு உமாசங்கர் கூறினார்.


Next Story