திருச்செந்தூரில் ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்க தடை துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவிப்பு


திருச்செந்தூரில் ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்க தடை துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவிப்பு
x
தினத்தந்தி 1 May 2019 9:45 PM GMT (Updated: 1 May 2019 8:23 PM GMT)

திருச்செந்தூரில் ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்க தடை விதிக்கப்படுவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத் தெரிவித்துள்ளார்.

ஆறுமுகநேரி,

காயல்பட்டினம் புதிய பஸ் நிலையம் முன்பு முஸ்லிம் ஐக்கிய பேரவை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று மாலையில் நடந்தது. திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத் தலைமை தாங்கி, கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பியவாறு, பொதுமக்கள் ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக சென்று, வள்ளல் சீதக்காதி திடலை வந்தடைந்தனர். பின்னர் அங்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத் பேசியதாவது:-

காயல்பட்டினத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு பெட்ரோல் வழங்கப்படுவது இல்லை என்று அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதனை அனைத்து பெட்ரோல் பங்குகளும் பின்பற்ற வேண்டும்.

அதேபோன்று திருச்செந்தூரில் வருகிற 7-ந் தேதியில் இருந்து ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வருகிறவர்களுக்கு, பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் வழங்க தடை விதிக்கப்படுகிறது. இதுகுறித்து அனைத்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்களும் ஒருமித்து அறிவித்து உள்ளனர்.

பெற்றோர்கள் தங்களது வாகனங்களை தங்களுடைய குழந்தைகள் ஓட்டிச் செல்ல அனுமதிக்க கூடாது. பெற்றோருக்கு தெரியாமல் வாகனத்தை எடுத்து ஓட்டும் குழந்தைகளை தடுப்பதற்காக, அவர்களுக்கு பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் வழங்க தடை விதிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்திரகாளி என்ற பவுன், சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா, முஸ்லிம் ஐக்கிய பேரவை தலைவர் அபுல் ஹசன் கலாமி, செயலாளர் வாவு சம்சுதீன், வாவு வஜீஹா கல்லூரி செயலாளர் முஹ்தசிம், துணை செயலாளர் வாவு இஸ்ஸாக், ஜமால், முகம்மது அபுபக்கர், காயல் அமானுல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.

Next Story