வேனில் பின்தொடர்ந்து சென்று ஓடும் லாரியில் ரூ.3 ¼ லட்சம் பீடி பண்டல் திருடிய கும்பல் ஒருவர் கைது; 4 பேருக்கு வலைவீச்சு


வேனில் பின்தொடர்ந்து சென்று ஓடும் லாரியில் ரூ.3 ¼ லட்சம் பீடி பண்டல் திருடிய கும்பல் ஒருவர் கைது; 4 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 2 May 2019 3:45 AM IST (Updated: 2 May 2019 1:29 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் இருந்து வந்த லாரியை வேனில் பின்தொடர்ந்து சென்று பீடி பண்டல் திருடிய கும்பலில் ஒருவர் சிக்கினார். 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

விருதுநகர்,

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் இருந்து பீடி பண்டல்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. அதை நெல்லை டவுன் சிவாதெருவை சேர்ந்த ராஜா (வயது43) என்பவர் ஓட்டி வந்தார். அதில் 250 பீடி பண்டல்கள் இருந்தன. நேற்று முன்தினம் விருதுநகர் புறவழிச்சாலையில் லாரி வந்தபோது பின்னால் உள்ள தார்ப்பாய் கிழிந்து தொங்குவதை டிரைவர் பார்த்தார்.

உடனே அவர் லாரியை நிறுத்தி கீழே இறங்கி பார்த்தபோது, தார்ப்பாய் கிழித்து இருந்த நிலையில் 11 பீடி பண்டல்கள் மாயமாகி இருப்பது தெரியவந்தது. அதனைதொடர்ந்து அவர் அந்தப்பகுதியில் பார்த்த போது சிறிது தொலைவில் ஒரு வேன் நிற்பதை பார்த்துள்ளார். சந்தேகம் அடைந்த அவர் விருதுநகர் மேற்கு போலீசில் புகார் செய்தார்.

போலீசார் துரிதமாக செயல்பட்டு அந்த வேனை மடக்கினர். அதில் இருந்த அதன் உரிமையாளர் நிலக்கோட்டையை சேர்ந்த காசி என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவரும் நிலக்கோட்டையை சேர்ந்த நவநீதன், நாகராஜன், ராஜூ, உசிலம்பட்டியை சேர்ந்த உசிலம்பட்டியான் ஆகியோர் பீடி பண்டல்களை திருடியிருப்பது தெரியவந்தது.

லாரியை பின்தொடர்ந்து வந்த இந்த கும்பல் ஆர்.ஆர்.நகர் பாலத்தில் லாரி மெதுவாக சென்றபோது ஓடும் லாரியில் ஏறி பீடி பண்டலை திருடியுள்ளனர். மேலும் பண்டல்களை திருட பின் தொடர்ந்து வந்துள்ளனர். திருடப்பட்ட பீடி பண்டல்களின் மதிப்பு ரூ. 3 லட்சத்து 30 ஆயிரம் ஆகும். அதனை மீட்ட போலீசார் வேனை பறிமுதல் செய்தனர். காசியை போலீசார் கைது செய்த நிலையில் மற்ற 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story