கறம்பக்குடி காசாம்பூ நீலமேனி கருப்பர் கோவில் திருவிழா


கறம்பக்குடி காசாம்பூ நீலமேனி கருப்பர் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 1 May 2019 10:30 PM GMT (Updated: 2019-05-02T01:44:18+05:30)

கறம்பக்குடி காசாம்பூ நீலமேனி கருப்பர் கோவில் திருவிழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் மதுக்குடம் எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் காசாம்பூ நீலமேனி கருப்பர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 17-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் மண்டகப்படிதார்கள் சார்பில், சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. கடந்த 24-ந்தேதி முளைப்பாரி எடுப்பு விழா நடைபெற்றது.

மதுக்குடம் ஊர்வலம்

இந்நிலையில், சித்திரை திருவிழாவையொட்டி நேற்று கறம்பக்குடி, தென்னகர், தட்டாவூரணி, அக்ரஹாரம் ஆகிய பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் மதுக்குடம் எடுத்து வந்தனர். அதன்படி மண்பானையில் தென்னம் பாலைகளை வைத்து அலங்கரித்து மேள தாளத்துடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விழாவையொட்டி கறம்பக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பால்குடம் மூலம் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபா ராதனை காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து மாலையில், கிடா வெட்டு பூஜையும், கருப்பர், வண்ணாத்தாள், கொம்பூகாரன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்திருந்தனர்.

கீரனூர்

கீரனூர் பஸ் நிறுத்தம் அருகில் பிடாரி அம்மன் கோவில் உள்ளன. இக்கோவிலில் கொங்கானி கருப்பர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சன்னதிகளும் உள்ளன. கோவிலில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதனையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு போட்டும், பொங்கல் வைத்தும் அம்மனை வழிபட்டனர். இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்திருந்தனர்.

அரிமளம்

அரிமளம் மார்க்கெட் முத்துமாரியம்மன் கோவிலில் மே தினத்தை முன்னிட்டு இந்திய கட்டுமான சம்மேளனம் எட்டாம் மண்டகப்படி கிளை சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 11 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் மற்றும் மலர்களால் அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

Next Story