கரூர் அரசு கலைக் கல்லூரியில் பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மையம் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்


கரூர் அரசு கலைக் கல்லூரியில் பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மையம் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 2 May 2019 3:45 AM IST (Updated: 2 May 2019 1:51 AM IST)
t-max-icont-min-icon

கரூர் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

கரூர்,

தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மூலம் நடத்தப்பட இருக்கும், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி கலந்தாய்வு சேவை மையம் கரூர் அரசு கலைக்கல்லூரியில் நிறுவப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 31-ந்தேதி வரை மாணவர்கள் தங்கள் விண்ணப்பத்தினை இணையவழி மூலமாக பதிவு செய்யலாம். இதற்காக மாணவர்கள் தங்களுடைய மின்னஞ்சல் முகவரி, அலைபேசி எண், பள்ளி தகவல்கள், பெற்றோர் விபரங்கள் மற்றும் பதிவு கட்டணம் செலுத்தும் விபரம் போன்றவற்றுடன் கலந்தாய்வு சேவை மையத்தில் வந்தும் பதிவு செய்துகொள்ளலாம். இணையவழி மூலமாக மேற்கண்ட விபரங்களுடன் தங்கள் வீட்டிலிருந்தும் பதிவு செய்து கொள்ள லாம். ஆனால் வங்கி வரைவு காசோலை (நாட்டுடைமை ஆக்கப்பட்ட வங்கிகள் மட்டும்) மூலம் பதிவு செய்ய கண்டிப்பாக சேவை மையம் வரவேண்டும்.

சான்றிதழ் சரிபார்ப்பு

2-வது கட்டமாக அடுத்த மாதம் ஜூன் 6-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நடைபெறவிருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு, அனைத்து மாணவர்களும் தவறாது தங்களது அசல் சான்றிதழ்களுடன் கரூர் அரசு கலைக்கல்லூரியின் சேவை மையத்திற்கு வரவேண்டும். அதற்குண்டான நாள் மற்றும் நேரம் தங்களது அலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு தகவல்கள் வந்து சேரும். 3-வது கட்டமாக ஜூலை 3-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நடைபெறவிருக்கும் இணையவழி விருப்பத்தேர்வு மற்றும் தேர்வினை உறுதி செய்தல் போன்றவற்றினை மாணவர்கள் தங்கள் வீட்டிலிருந்தோ அல்லது சேவை மையத்திலோ செய்து கொள்ளலாம்.

தனித்தனி அலுவலர்கள்

விண்ணப்பம் பதிவு செய்ய www.tne-a-o-n-l-i-ne.in அல்லது www.tndte.gov.in என்ற இணையதளங்களை பயன்படுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு கரூர் அரசு கலைக்கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள கலந்தாய்வு சேவை மையத்தினை அணுகலாம்.

மேலும், மாணவர்களின் வசதிக்காக கல்லூரி வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் நின்று செல்லும் வகையிலும், தடையில்லா மின்சாரம் மற்றும் இணையதள வசதி வழங்கவும், ஆன்லைன் மூலம் சான்றிதழ்களின் மெய்த்தன்மை காண்பதற்கான வசதியும் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பதற்காக 25 இடங்களில் மேஜை வசதிகளும் செய்து கொடுப்பதற்காக தனித்தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அதிகளவில் மாணவர்கள் வருவார்கள் என்பதை கணக்கில் கொண்டு நடமாடும் மருத்துவக்குழு சுழற்சி முறையில் இயங்க உள்ளது. புதிதாக வரும் மாணவர்களுக்கு வழிகாட்டியாக நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள் பயன்படுத்தப்பட உள்ளனர். மேற்கண்ட தகவலை கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். 

Next Story