தண்டையார்பேட்டையில் பீரோ குடோனில் ரூ.12 லட்சம் திருட்டு; 3 ஊழியர்களிடம் போலீஸ் விசாரணை


தண்டையார்பேட்டையில் பீரோ குடோனில் ரூ.12 லட்சம் திருட்டு; 3 ஊழியர்களிடம் போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 1 May 2019 10:34 PM GMT (Updated: 2019-05-02T04:04:38+05:30)

பீரோ தயாரிக்கும் குடோனில் இருந்த ரூ.12 லட்சம் திருட்டு போனது. இது தொடர்பாக அங்கு பணியாற்றும் 3 ஊழியர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பெரம்பூர்,

சென்னை தண்டையார்பேட்டை எண்ணூர் நெடுஞ்சாலையில் மோகன்லால் பன்சால் என்பவருக்கு சொந்தமான இரும்பு பீரோ தயாரிக்கும் குடோன் உள்ளது. இங்கு 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மோகன்லால் பன்சால், குடோனில் உள்ள பீரோவில் ரூ.12 லட்சத்து 10 ஆயிரத்தை வைத்து பூட்டிவிட்டு லண்டனுக்கு சுற்றுலா சென்றுவிட்டார்.

இதற்கிடையில் அவருடைய மகன் அங்கித்பன்சால் குடோனில் உள்ள பீரோவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த ரூ.12 லட்சத்து 10 ஆயிரம் மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மர்மநபர்கள் அந்த பணத்தை திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.

இதுபற்றி தனது தந்தைக்கு தகவல் தெரிவித்தார். லண்டனில் இருந்து திரும்பி வந்த மோகன்லால் பன்சால், பீரோ முழுவதும் தேடியும் பணம் கிடைக்கவில்லை. ஊழியர்களிடம் விசாரித்தும் சரியான பதில் இல்லை.

இதுபற்றி அவர் புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குடோனில் வேலை செய்யும் 3 ஊழியர்களிடம் சந்தேகத்தின்பேரில் விசாரித்து வருகின்றனர்.

Next Story