சங்ககிரி அருகே, பணம் திருடியதாக நினைத்து பட்டறையில் கட்டிவைத்து தொழிலாளி அடித்துக்கொலை - 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை


சங்ககிரி அருகே, பணம் திருடியதாக நினைத்து பட்டறையில் கட்டிவைத்து தொழிலாளி அடித்துக்கொலை - 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 1 May 2019 10:45 PM GMT (Updated: 1 May 2019 11:31 PM GMT)

சங்ககிரி அருகே, பட்டறையில் பணத்தை திருடியதாக நினைத்து தொழிலாளியை கட்டிவைத்து அடித்ததில் அவர் இறந்தார். இதுதொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சங்ககிரி, 

புதுச்சேரி வில்லியனூரை சேர்ந்தவர் செல்வம் மகன் ஜெபஸ்டின் (வயது 19). இவர் சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே கூழகவுண்டனூரில் வீரமணிகண்டன் (33) என்பவருடைய பட்டறையில் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். அந்த பட்டறையில் கடந்த 8 மாதங்களாக லாரிகளுக்கு பெயிண்டு அடிக்கும் வேலையை ஜெபஸ்டின் செய்து வந்தார்.

கடந்த 27-ந்தேதி அந்த பட்டறையில் ஒரு லாரிக்கு பெயிண்டு அடித்ததற்காக அந்த லாரியின் உரிமையாளர் ரூ.24 ஆயிரத்து 500-ஐ கொண்டு வந்து வீரமணிகண்டனிடம் கொடுத்தார். அதில் ரூ.2 ஆயிரத்தை எடுத்து விட்டு மீதி தொகை ரூ.22 ஆயிரத்து 500-ஐ வீரமணிகண்டன் பட்டறையில் வைத்து இருந்தார்.

பின்னர் வீரமணிகண்டன் பட்டறையில் இருந்து வெளியே சென்று விட்டு மீண்டும் திரும்பி வந்தார். அப்போது பட்டறையில் வைத்திருந்த பணத்தில் ரூ.8 ஆயிரத்து 500 திருட்டு போய் இருந்தது. இதனால் ரூ.14 ஆயிரம் மட்டுமே அங்கு இருந்ததை பார்த்து வீரமணிகண்டன் அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி ஜெபஸ்டினிடம் வீரமணிகண்டன் கேட்டார். அதற்கு அவர் தான் அந்த பணத்தை திருடவில்லை என்று கூறிவிட்டார். ஆனாலும் ஜெபஸ்டின் மீது வீரமணிகண்டனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து வீரமணிகண்டன் பட்டறையில் இருந்து வெளியே சென்று விட்டார்.

இதன்பின்னர் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு வீரமணிகண்டன் மீண்டும் பட்டறைக்கு வந்தார். அப்போது ஜெபஸ்டின் குளித்து விட்டு ஊருக்கு செல்ல தயாராக இருந்தார். இதனால் அவர் மீது மேலும் சந்தேகம் அடைந்த வீரமணிகண்டன் மற்றொரு வேன் டிரைவர் ஓமலூர் சர்க்கரைசெட்டிபட்டியை சேர்ந்த முருகேசன் (34) என்பவரை அங்கு அழைத்தார்.

அவர் வந்ததும் முருகேசனும், வீரமணிகண்டனும் சேர்ந்து ஜெபஸ்டினை அடித்து தாக்கி பணம் எங்கே? என்று கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஜெபஸ்டின் பணம் திருட்டு போனது பற்றி எனக்கு தெரியாது, பட்டறையில் வேலை செய்யும் மற்றொரு தொழிலாளி பிரபாகரனிடம் (26) கேளுங்கள் என்று கூறியதாக தெரிகிறது. இதைகேட்ட வீரமணிகண்டன் செல்போன் மூலம் பிரபாகரனை தொடர்பு கொண்டு பட்டறைக்கு வரும்படி கூறினார். இதையடுத்து பிரபாகரன் மற்றும் அவருடைய நண்பர் வெங்கடேசன் (26) ஆகியோர் அங்கு வந்தனர்.

பணத்தை ஜெபஸ்டின் தான் திருடி இருப்பார் என நினைத்து வீரமணிகண்டன், முருகேசன், பிரபாகரன், வெங்கடேசன் ஆகிய 4 பேரும் சேர்ந்து அவரை பிடித்து பட்டறையில் கட்டி வைத்தனர். பின்னர் அவரை அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஜெபஸ்டினுக்கு கை, கால், முதுகு போன்ற இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அவரை சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் வழியில் அவர் இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துசாமி மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

ஜெபஸ்டின் கொலை தொடர்பாக 4 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story