நெய்வேலியில், கல்லூரி மாணவிகளை கேலி செய்த வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

நெய்வேலியில் கல்லூரி மாணவிகளை கேலி செய்த வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கடலூர்,
நெய்வேலி 21-வது வட்டம் அண்ணாநகரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மனைவி ஆண்டாள்(வயது48). கடந்த மாதம் 1-ந்தேதி இவரது வீட்டு முன்பு கல்லூரி மாணவிகள் சென்று கொண்டு இருந்தனர். அவர்களை அதே பகுதியைச்சேர்ந்த விமல்ராஜ்(25), வெங்கடேசன் ஆகியோர் கேலி செய்தனர். இதை கவனித்த ஆண்டாள், இருவரையும் கண்டித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் ஆண்டாளை அசிங்கமாக திட்டி, அவரது வீட்டை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது பற்றி அவர் கொடுத்த புகாரின் பேரில் நெய்வேலி தெர்மல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிந்திரராஜ் வழக்குப்பதிவு செய்து, விமல்ராஜையும், வெங்கடேசனையும் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தார்.
இந்த நிலையில் விமல்ராஜை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடுமாறு மாவட்ட கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவுப்படி விமல்ராஜை தெர்மல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிந்திரராஜ் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தார். விமல்ராஜ் மீது ஏற்கனவே தெர்மல் போலீஸ் நிலையத்தில் 5 வழக்குகள் உள்ளன.
அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவின் நகல், கடலூர் மத்திய சிறையில் உள்ள விமல்ராஜிடம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story