கர்நாடகத்தில் மழை வேண்டி கோவில்களில் சிறப்பு யாகம் : ஜோதிடரின் அறிவுரைப்படி முதல்-மந்திரி குமாரசாமி நடவடிக்கை?
கர்நாடகத்தில் மழை வேண்டி கோவில்களில் சிறப்பு யாகம் நடத்தப்பட உள்ளது. ஜோதிடரின் அறிவுரைப்படி முதல்-மந்திரி குமாரசாமி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் பெங்களுரு உள்பட பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இருப்பினும் மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் வறட்சி நிலவுகிறது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு உருவாகி உள்ளது. 176 தாலுகாக்களில் 156 தாலுகாக்களின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு தலை விரித்தாடுகிறது.
வறட்சி காரணமாக ‘கரீப்’ மற்றும் ‘ரபி’ பருவத்தில் கர்நாடகத்தில் ரூ.32 ஆயிரத்து 335 கோடிக்கு பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக பலர் தங்களின் சொந்த ஊர்களை விட்டு வெளியேறி வாழ்வாதாரத்துக்கு பிற ஊர்களுக்கு இடம் பெயருகிறார்கள். இதை கையில் எடுத்து கொண்டு எதிர்க்கட்சியான பா.ஜனதா ஆளும் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) அரசை குற்றம்சாட்டி வருகிறது.
இந்த நிலையில், வறட்சியை போக்க முதல்-மந்திரி குமாரசாமி சார்பில் கோவில்களில் சிறப்பு யாகம், பூஜைகள் நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறிவுரையை முதல்-மந்திரி குமாரசாமியிடம் அவருக்கு நெருக்கமான ஜோதிடர் துவாரகாநாத் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.
அதன்படி, சிருங்கேரி அருகே கிக்கா என்ற இடத்தில் வைத்து ‘ரிஷ்யாசிரிங்க யாகம்’ நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. சமீபத்தில் காபி தோட்ட விவசாயிகள் மழை வேண்டி அங்கு ‘ரிஷ்யாசிரிங்க யாகம்’ நடத்தியதால் அதிகளவில் மழை பெய்ததை தொடர்ந்து இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதவிர பல்வேறு கோவில்களிலும் மழை வேண்டி வருண பகவானுக்கு சிறப்பு பூஜை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அறநிலையத்துறையினர் கூறுகையில், ‘ஒவ்வொரு ஆண்டும் மழை வேண்டி கோவில்களில் சிறப்பு பூஜை, யாகம் நடத்தப்படும். இந்த ஆண்டும் சிறப்பு பூஜை, யாகம் நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது’ என்றனர்.
இதுபற்றி முதல்-மந்திரி அலுவலக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து சிறப்பு பூஜை, யாகம் நடத்துவது தொடர்பாக எந்த உத்தரவும் வெளியிடப்படவில்லை. ஆனால், மடாதிபதிகளின் ஆலோசனைப்படி ஆண்டுதோறும் அறநிலையத்துறை சார்பில் மழை வேண்டி பூஜை, யாகம் செய்யப்படுகிறது’ என்றனர்.
இதுகுறித்து சிருங்கேரி கோவில் அர்ச்சகர்கள் கூறுகையில், ‘ ‘ரிஷ்யாசிரிங்க யாகம்’ நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மடத்தின் மூத்த அர்ச்சகர்கள் இதை செய்ய உள்ளனர். இந்த யாகத்துடன் வருண பகவானுக்கு சிறப்பு பூஜைகளும் நடக்கிறது’ என்றனர்.