ஈரோடு பஸ் நிலையத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
ஈரோடு பஸ் நிலையத்தில் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் ஆய்வு செய்தார்.
ஈரோடு,
ஈரோடு பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கழிப்பறைகளில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் நேற்று காலை ஆய்வு செய்தார். அப்போது அவர் கழிப்பறைகளுக்குள் சென்று பராமரிப்பு பணிகளை பார்வையிட்டு விரைந்து முடிக்க வேண்டும் என்று ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். அதன்பின்னர் பஸ் நிலைய வளாகத்தில் நடப்பட்டு உள்ள மரக்கன்றுகளையும் அவர் பார்வையிட்டார்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது:–
ஈரோடு பஸ் நிலைய வளாகத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு பார்வையிட்டேன். அப்போது கழிப்பறைகளில் சுகாதாரம் குறைவாக காணப்பட்டது. மேலும் சேதமடைந்த பகுதிகளை புதுப்பிக்க உத்தரவிட்டு உள்ளேன். அங்கு புதிய டயல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டு வருகிறது.
பஸ் நிலைய வளாகத்தில் மரங்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையில் உள்ளன. இதனால் 100 மரக்கன்றுகள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒவ்வொரு மரக்கன்றும் குறைந்தபட்சம் 5 அடி உயரம் உடையது. அப்போதுதான் விரைவாக வளர்ந்து பயன்அளிக்கும். கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், தினமும் தண்ணீர் ஊற்றப்படுவதால் மரக்கன்றுகள் காய்ந்துவிடாமல் துளிர்விட்டு வளர்ந்து காணப்படுகிறது.
மரக்கன்றுகள் பெரிதாக வளர்ந்துவிட்டால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். மேலும், பயணிகளும் மரத்தடியில் நிழலுக்காக நிற்கலாம். இதேபோல் பூங்கா பகுதிகளிலும் புங்கம், வேப்பம் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.
இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறினார்.