பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் பயங்கர தீ விபத்து

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பல் சிகிச்சை பிரிவு பலத்த சேதம் அடைந்தது.
நெல்லை,
பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் பொது மருத்துவ பிரிவு, விபத்து சிகிச்சை பிரிவு, குழந்தைகள் பிரிவு, மகளிர் நோய் மற்றும் மகப்பேறு பிரிவு, எலும்பு முறிவு பிரிவு, இருதய நோய், சிறுநீரக நோய், அறுவை சிகிச்சை பிரிவு, காது மூக்கு தொண்டை, கண், பல், தோல் பிரிவு, புற்றுநோய் பிரிவு என பல்வேறு பிரிவுகள் உள்ளன.
இங்கு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்கி சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த ஆஸ்பத்திரியில் கண் நோய் பிரிவு, தோல் பிரிவு செயல்படும் கட்டிடத்தில் பல் சிகிச்சை பிரிவும் செயல்பட்டு வருகிறது.
பல் சிகிச்சை பிரிவில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி அளவில் மின்சார கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்தது. இதில் தெர்மாகோல் மற்றும் பஞ்சு நிறைந்த நாற்காலிகள் இருந்ததால் தீ கொளுந்து விட்டு எரிந்தது. உடனடியாக இதுபற்றி பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று தீயை போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சி அளித்தது. இரவில் தீப்பிடித்து எரிந்ததால் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை.
இந்த தீ விபத்தில் தெர்மாகோல் மற்றும் நாற்காலிகள் மட்டும் தான் எரிந்தது. மற்றபடி எந்தவித பாதிப்பும் இல்லை என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இந்த தீ விபத்து குறித்து நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story






