திருப்பத்தூர் அருகே ரூ.7 ஆயிரத்துக்காக ஏற்பட்ட தகராறில் பயங்கரம்: வாலிபர் அடித்துக்கொலை; 3 பேர் கைது


திருப்பத்தூர் அருகே ரூ.7 ஆயிரத்துக்காக ஏற்பட்ட தகராறில் பயங்கரம்: வாலிபர் அடித்துக்கொலை; 3 பேர் கைது
x
தினத்தந்தி 5 May 2019 5:15 AM IST (Updated: 5 May 2019 4:32 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே ரூ.7 ஆயிரத்துக்காக ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். அவருடன் சென்றவர் தாக்குதலில் படுகாயம் அடைந்தார். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர்,

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கண்டரமாணிககம் கள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 35). அவருடைய நண்பர் கண்டரமாணிககம் அருகே உள்ள கொங்கரத்தியைச் சேர்ந்த நாராயணன். இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். பழனியப்பனின் மற்றொரு நண்பர் சுரேந்தர். இவர் ஆட்டோ வாங்க விரும்பினாராம்.

அதைத்தொடர்ந்து சுரேந்தர், பழனியப்பன் மூலமாக நாராயணனிடம் ஒப்பந்த அடிப்படையில் ஆட்டோவை வாடகைக்கு எடுத்துள்ளார். அதில் ரூ.7 ஆயிரம் பாக்கி கொடுக்க வேண்டியிருந்தது. அதில் ஏற்பட்ட பிரச்சினையில் நண்பருக்காக ரூ.2 ஆயிரத்தை பழனியப்பன் கொடுத்தாராம். ஆனால் அதை வாங்க மறுத்த நாராயணன் தனக்கு முழு பணமும் வேண்டும் என்று கேட்டதாகவும், மேலும் அந்த பணத்தை சுரேந்தரிடம் வாங்கிக் கொள்வதாகவும் கூறினாராம்.

அதைத்தொடர்ந்து பழனியப்பனுக்கும், நாராயணனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. இதையடுத்து அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது. இந்த பிரச்சினை குறித்து நாராயணன் தனது நண்பரான கல்லலை சேர்ந்த வெற்றியிடம் கூறியுள்ளார். பின்னர் நாராயணன், வெற்றி உள்பட 5 பேர் கண்டரமாணிக்கம் டாஸ்மாக் கடையில் மது குடித்தனர்.

அப்போது பழனியப்பன் மற்றும் கே.வலையப்பட்டியை சேர்ந்த பாண்டி (45) ஆகியோரும் அங்கு மது குடிக்க வந்தனர். அப்போது மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

பின்பு பழனியப்பனும், பாண்டியும் ஒரு மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அப்போது நாராயணன் தனது நண்பர்கள் 5 பேருடன் 2 மோட்டார் சைக்கிள்களில் பின் தொடர்ந்து சென்று, கண்டரமாணிககம் –பொன்னாங்குடி ரோட்டில் பழனியப்பனை வழிமறித்து சரமாரியாக அடித்துள்ளனர். இதை தடுத்த பாண்டியும் தாக்கப்பட்டார்.

பின்பு தாக்குதல் நடத்திய 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவத்தில் பழனியப்பன் அதே இடத்தில் பலியானார். படுகாயம் அடைந்த பாண்டி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருக்கோஷ்டியூர் போலீசார், பழனியப்பனின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாத்துரை தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி தப்பியோடியவர்களை தேடி வந்தனர்.

அதில் நாராயணன் (34), கண்டரமாணிக்கம் வடக்கு தெருவை சேர்ந்த சந்திரசேகர் (40), கல்லலை சேர்ந்த செல்வக்குமார் (34) ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் அருள், வெற்றியை தேடி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட பழனியப்பனுக்கு திருமணமாகி, அவருடைய மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story