சாக்கடை தூர்வாரும் பணியை துரிதப்படுத்த வேண்டும் அதிகாரிகளுக்கு, மாநகராட்சி கமிஷனர் உத்தரவு


சாக்கடை தூர்வாரும் பணியை துரிதப்படுத்த வேண்டும் அதிகாரிகளுக்கு, மாநகராட்சி கமிஷனர் உத்தரவு
x
தினத்தந்தி 5 May 2019 9:44 PM GMT (Updated: 5 May 2019 9:44 PM GMT)

மும்பையில் சாக்கடை தூர்வாரும் பணி இதுவரை 35 சதவீதம் மட்டுமே நிறைவடைந்து உள்ள நிலையில், இந்த பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டு உள்ளார்.

மும்பை,

மும்பையில் 2005-ம் ஆண்டு வரலாறு காணாத வகையில் பேய்மழை பெய்து பெருவெள்ளம் ஏற்பட்டது. அப்போது, மும்பை நகரமே தண்ணீரில் தத்தளித்தது. உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் அதிகளவில் ஏற்பட்டது. மழைநீர் வழிந்தோடுவதற்கு வசதியாக சாக்கடைகள் தூர்வாரப்படாமல் இருந்ததே வெள்ளபாதிப்புக்கு காரணம் என தெரியவந்தது.

அந்த வெள்ளத்திற்கு பிறகு ஆண்டு தோறும் மும்பையில் உள்ள பெரிய மற்றும் சிறிய சாக்கடைகள் மழைக்காலத்திற்கு முன் மாநகராட்சியால் தூர்வாரப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு மழைக்காலம் அடுத்த மாதம்(ஜூன்) தொடங்க உள்ளது. இதையொட்டி நகரில் உள்ள சாக்கடைகள் தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன.

நகரில் இதுவரை சாக்கடை தூர்வாரும் பணி வெறும் 35 சதவீதம் மட்டும் தான் முடிந்து உள்ளதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது. சாக்கடைகளில் இருந்து 5 லட்சத்து 40 ஆயிரம் டன் கழிவுகள் அள்ளி அகற்றப்பட வேண்டிய நிலையில் 1 லட்சத்து 90 ஆயிரம் கழிவுகள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளது.

மும்பையின் பெரிய சாக்கடை கால்வாயான மித்தி நதியில் இதுவரை 44.4 சதவீதம் தூர்வாரும் பணி முடிந்து உள்ளதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது. மழைக்காலம் தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், இந்த மாத இறுதிக்குள் மீதமுள்ள 65 சதவீத பணிகள் முடிந்து விடுமா? என கேள்வி எழுந்து உள்ளது.

இந்தநிலையில், நேற்றுமுன்தினம் மாநகராட்சி கமிஷனர் அஜாய் மேத்தா அதிகாரிகளுடன் சாக்கடை தூர்வாரும் பணி குறித்து கலந்தாய்வு செய்தார். அப்போது, தூர்வாரும் பணிகளை துரிதமாக மேற்கொண்டு விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதற்கிடையே, தூர்வாரப் படாமல் கிடந்த சாக்கடை களை நேற்று மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ரவிராஜா பார்வையிட்டார்.

Next Story