அரசு ஊழியர் வீட்டில் நகை –பணம் கொள்ளை: கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள 3 பேருக்கு வலைவீச்சு


அரசு ஊழியர் வீட்டில் நகை –பணம் கொள்ளை: கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள 3 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 6 May 2019 4:00 AM IST (Updated: 6 May 2019 3:38 AM IST)
t-max-icont-min-icon

அரசு ஊழியர் வீட்டில் நகை பணம் கொள்ளை அடிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோடு,

ஈரோடு மூலப்பாளையம் பாரதிநகர் 3–வது தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 44). இவர் நெடுஞ்சாலைத்துறையில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். சரவணன் கடந்த மாதம் 30–ந் தேதி தனது குடும்பத்துடன் கேரள மாநிலத்துக்கு சுற்றுலா சென்றார். பின்னர் அவர்கள் கடந்த 5–ந் தேதி வீடு திரும்பினர்.

அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 13½ பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்தை காணவில்லை. அதை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சரவணன் இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசில் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சரவணனின் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கேமரா காட்சிகளையும் போலீசார் பார்வையிட்டனர்.

அதில் 3 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளில் வந்ததும், ஒருவன் வெளியில் நின்று நோட்டமிட்டதும், 2 பேர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்து சென்றதும் பதிவாகி உள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story