பெண்களிடம் தொடர் நகை பறிப்பு: ஈரோடு ரெயில் நிலையத்தில் போலீசார் விழிப்புணர்வு


பெண்களிடம் தொடர் நகை பறிப்பு: ஈரோடு ரெயில் நிலையத்தில் போலீசார் விழிப்புணர்வு
x
தினத்தந்தி 6 May 2019 4:00 AM IST (Updated: 6 May 2019 3:38 AM IST)
t-max-icont-min-icon

ஓடும் ரெயிலில் பெண்களிடம் தொடர்ந்து நகை பறிப்பு சம்பவங்கள் நடந்து வருவதால், ஈரோடு ரெயில் நிலையத்தில் போலீசார் நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஈரோடு,

ஈரோடு ரெயில் நிலையத்துக்கும், மாவேலிப்பாளையம் ரெயில் நிலையத்துக்கும் இடைப்பட்ட பகுதிகளில் ரெயில்வே தரைமட்ட பாலம் சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் அனைத்து ரெயில்களும் 20 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது.

கடந்த 3–ந்தேதி நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 3.30 மணி வரை அந்த வழியாக சென்ற 4 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணம் செய்த பெண்களிடம் மர்ம நபர்கள் சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டனர். மொத்தம் 10 பெண்களிடம் 30 பவுன் நகைகளை கொள்ளையர்கள் கொள்ளை அடித்து சென்றனர். இதைத்தொடர்ந்து நகைகளை பறிகொடுத்த பெண்கள் இதுபற்றி சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நேற்று முன்தினம் நள்ளிரவில் மாவேலிப்பாளையம் வழியாக வந்த ரெயில்களில் ஏறிய மர்ம நபர்கள் 2–வது நாளாக தங்களது கைவரியை காட்டி உள்ளனர். 4 பெண்களிடம் 10 பவுன் நகைகளை அவர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். பெண்களை மட்டும் குறி வைத்து நகையை கொள்ளை அடிக்கும் மர்ம நபர்களால் பெண் பயணிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

தற்போது கொள்ளையர்களை பிடிக்கவும், அவர்களை கண்காணிக்கவும் போலீசார் தீவிர ரோந்து வருகிறார்கள். மேலும் மாவேலிப்பாளையம் ரெயில் நிலையம் பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று ஈரோடு ரெயில் நிலையம் வழியாக சென்ற ரெயில்களில் ரெயில்வே போலீஸ் சப் –இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் ஏறி ரெயிலில் பயணம் செய்த பெண்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

மேலும் போலீசார் பயணிகளிடம், ‘நகை அணிந்துகொண்டு ரெயிலில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து பெண்கள் பயணம் செய்ய வேண்டாம். கழுத்தில் நகை அணிந்திருந்தால் அதை சேலை மற்றும் துப்பட்டாவால் மறைத்துக்கொள்ள வேண்டும். ரெயிலில் சந்தேகப்படும்படியாக யாரேனும் பயணம் செய்தால் உடனடியாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும்’ என்று அறிவுரை வழங்கினார்கள்.


Next Story