பாலக்காடு– திருச்செந்தூர் ரெயில் இந்த மாதம் திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கம் தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் வேதனை
பாலக்காடு– திருச்செந்தூர் ரெயில் இந்த மாதம் திண்டுக்கல் மற்றும் மதுரை வரை மட்டுமே இயக்கப்படுவதால் தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் ஏமாற்றமும் வேதனை அடைந்துள்ளனர்.
உடுமலை,
கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை, பழனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி வழியாக திருச்செந்தூருக்கு பயணிகள் ரெயில் (வண்டி எண் 56769) உள்ளது.
அதேபோன்று எதிர் மார்க்கத்திலும் திருச்செந்தூரில் இருந்து பாலக்காட்டிற்கு பயணிகள் ரெயில்(வண்டி எண் 56770) உள்ளது. இந்த ரெயில் இயக்கத்தால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள், கன்னியாகுமரி, பாபநாசம், உள்ளிட்ட சுற்றுலா ஸ்தலங்களுக்கு செல்லும் பயணிகள் மற்றும் திருச்செந்தூருக்கு செல்லும் பக்தர்கள் பயனடைவார்கள்.
இந்த நிலையில் விருதுநகருக்கும் சாத்தூருக்கும் இடையில் தண்டவாளத்தில் உள்ள சிலீப்பர் கட்டைகளை மாற்றியமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் திருச்செந்தூர் வரை செல்ல வேண்டிய இந்த ரெயில் வருகிற (மே மாதம்) 31–தேதி வரை 5 நாட்கள் திண்டுக்கல் வரையும் 2 நாட்கள் மதுரை வரையும் மட்டுமே இயக்கப்படும். இந்த மாற்றம் கடந்த 3–ந்தேதி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த பாலக்காடு – திருச்செந்தூர் பயணிகள் ரெயில் ஞாயிறு, திங்கள், புதன், வியாழன் மற்றும் சனிக்கிழமை ஆகிய 5 நாட்கள் திண்டுக்கல் வரை மட்டும் செல்லும். அதன்படி பாலக்காட்டில் இருந்து காலை 4.20 மணிக்கு புறப்படும் திருச்செந்தூர் பயணிகள் ரெயில் உடுமலை ரெயில் நிலையத்திற்கு காலை 6.33 மணிக்கு வந்து இங்கிருந்து 6.35 மணிக்கு புறப்பட்டுச்செல்லும். அந்த ரெயில் காலை 9.10 மணிக்கு திண்டுக்கல் சென்றடையும். பின்னர் அங்கிருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு உடுமலைக்கு இரவு 7.33 மணிக்கு வரும்.
இங்கிருந்து 7.35 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு பாலக்காடு சென்றடையும். இந்த ரெயில் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமை ஆகிய 2 நாட்கள் பாலக்காட்டில் இருந்து மதுரை வரை இயக்கப்படும். காலை 4.20 மணிக்கு பாலக்காட்டில் இருந்து புறப்படும் இந்த ரெயில் காலை 10.10 மணிக்கு மதுரையை சென்றடையும்.
வழக்கமாக இந்த ரெயில் மதுரையில் இருந்து பாலக்காட்டிற்கு மாலை 4 மணிக்கு புறப்படும். ஆனால் இந்த ரெயில் திருச்செந்தூருக்கு செல்லாமல் மதுரையில் நிறுத்தப்படுவதால் மாலை 4 மணிக்கு பதிலாக 6.45.மணிக்கு புறப்பட்டு உடுமலை, பொள்ளாச்சி வழியாக நள்ளிரவு 12.15 மணிக்கு பாலக்காடு சென்றடையும்.
தற்போது கோடை காலம், பள்ளிகளுக்கும் விடுமுறை என்பதால் பலர் குடும்பத்துடன் தென்மாவட்டங்களில் உள்ள சொந்த ஊர்களுக்குச்செல்வதற்கும், பலர் தென்மாவட்டங்களில் உள்ள சுற்றுலா ஸ்தலங்களுக்கு செல்வதற்கும் திட்டமிட்டிருப்பார்கள். அதேபோன்று பக்தர்கள் திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதற்கும் திட்டமிட்டிருப்பார்கள்.
குழந்தைகளை அழைத்துக்கொண்டு குடும்பத்துடன் செல்லும் பயணிகள் பஸ் பயணத்தை விட ரெயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர். அப்படிப்பட்ட நிலையில் திருச்செந்தூருக்கு செல்லவேண்டிய ரெயில் திண்டுக்கல் மற்றும் மதுரையுடன் நிறுத்தப்படுவதால் ரெயில் பயணிகள் ஏமாற்றமும், வேதனையும் அடைந்துள்ளனர்.