சங்கராபரணி ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட மினிவேன், 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்
சங்கராபரணி ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட மினிவேன், 2 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருக்கனூர்,
காட்டேரிகுப்பம் போலீசார் நேற்று அதிகாலை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.வள்ளலார் கோவில் அருகே அவர்கள் சென்ற போது 2 மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி வந்தவர்கள் போலீசாரை கண்டதும் வண்டியை அப்படியே நிறுத்தி விட்டு தப்பி ஓடினார்கள்.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையின் போது சுத்துக்கேணி சங்கரபரணி ஆற்றில் இருந்து மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்தி வரப்பட்டதும், தப்பி ஓடியவர்கள் தமிழக பகுதியான வானூர் ராமலிங்கம்(வயது 45) தாண்டவராயன்(50) என்பதும் தெரியவந்தது.
இதை தொடர்ந்து போலீசார் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து தப்பி ஓடிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.
இதே போல் திருபுவனை போலீசார் சப்–இன்ஸ்பெக்டர் பிரியா தலைமையில் பி.எஸ்.பாளையம், மதகடிப்பட்டு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக மினி வேன் ஒட்டி வந்த டிரைவர் போலீசாரை பார்த்ததும் நடு ரோட்டில் வேனை நிறுத்தி விட்டு தப்பி ஓடினார். இதை தொடர்ந்து போலீசார் மினி வேனை சோதனை செய்த போது அதில் மணல் நிரப்பப்பட்டு இருந்தது.
பின்னர் விசாரணை செய்த போது வேனை ஓட்டி வந்தவர் கலிதீர்த்தாள் குப்பத்தை சேர்ந்த ஆனந்த் என்பதும், குச்சிபாளையம் பகுதி ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது.மினி வேனைபறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய ஆனந்தை தேடி வருகின்றனர்.