ஈரோடு ரெயில் நிலையத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்; பயணிகள் கோரிக்கை


ஈரோடு ரெயில் நிலையத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்; பயணிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 7 May 2019 3:45 AM IST (Updated: 7 May 2019 12:23 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு ரெயில் நிலையத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு,

ஈரோடு ரெயில் நிலையம் வழியாக தினமும் 100-க்கும் மேற்பட்ட ரெயில்கள் சென்று வருகின்றன. மேலும் வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் இங்கு வேலைக்காக வருவதாலும், ஜவுளிகள் வாங்க வருவதாலும் வடமாநிலங்களில் இருந்து ஈரோட்டிற்கு வரும் ரெயில்களில் எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி காணப்படும்.

இதேபோல் ஈரோட்டில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில் போன்ற தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரெயில்களிலும் தினமும் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதன்காரணமாக ஈரோடு ரெயில் நிலையத்தில் 24 மணி நேரமும் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.

இதை சாதகமாக பயன்படுத்தி கொண்டு மர்ம நபர்கள் அடிக்கடி பயணிகளிடம் நகை, செல்போன் போன்றவற்றை திருடிச்சென்று விடுகிறார்கள். இதுதொடர்பாக ஏராளமான வழக்குகள் ஈரோடு ரெயில் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. தென்னக ரெயில்வே பொது மேலாளராக கடந்த ஆண்டு குல்ஷ்ரேஸ்தா இருந்தபோது ஈரோடு ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறும்போது, ‘ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்காக தென்னக ரெயில்வேக்கு ரூ.36 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்பந்த புள்ளி விரைவில் கோரப்பட்டு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெறும்’ என்று கூறினார். ஆனால் இன்னும் கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெறவில்லை.

இதுகுறித்து ரெயில் பயணிகள் கூறும்போது, ‘ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து வெளி ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்றால் சில நேரங்களில் ரெயிலுக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அப்படி காத்திருக்கும்போது சிலர் தூங்கி விடுவதுண்டு.

இதை மர்ம நபர்கள் சாதகமாக பயன்படுத்தி கொண்டு அவர்களிடம் உள்ள செல்போன், நகை மற்றும் பொருட்களை நைசாக திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பி விடுகிறார்கள். பின்னர் எழுந்து பார்த்தபோது தான் பொருட்கள் காணாமல் போனது தெரிய வருகிறது.

இதுகுறித்து ரெயில்வே போலீசில் புகார் தெரிவித்தும் மர்ம நபர்களை பிடிக்க முடிவதில்லை. கண்காணிப்பு கேமராக்கள் இருந்தால் அதில் பதிவான காட்சிகளை வைத்து திருடர்களை எளிதில் கண்டுபிடித்து விடலாம். எனவே ஈரோடு ரெயில் நிலையத்தில் மர்ம நபர்களை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்’ என்றனர்.

Next Story