குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கிராம மக்கள் மனு


குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கிராம மக்கள் மனு
x
தினத்தந்தி 7 May 2019 4:15 AM IST (Updated: 7 May 2019 12:44 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கிராம மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனுகொடுத்தனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் ஓடக்கரை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். இவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:– எங்கள் கிராமத்தில் 150 குடியிருப்புகள் உள்ளன. கடந்த காலங்களில் எங்கள் பகுதிக்கு ஊராட்சி சார்பில் குடிநீரும், காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் மேல்நிலைத்தொட்டி கட்டி குடிநீரும் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஊராட்சி குடிநீர் கடந்த ஒரு வருடமாகவும், காவிரி கூட்டுக்குடிநீர் கடந்த 6 மாதமாக வரவில்லை.

இதனால் நாங்கள் அன்றாட உபயோகத்திற்கு ரூ.5 விலை கொடுத்தும், குடிப்பதற்கு ரூ.15 விலை கொடுத்தும் தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகிறோம். நாங்கள் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைத்து வரும் நிலையில் சம்பாதிக்கும் பணம் தண்ணீருக்கே சரியாகி வருகிறது. எங்கள் கிராம பகுதியில் குடிநீர் ஆதாரங்கள் வேறு எங்கும் இல்லாததால் நாங்கள் சொல்ல முடியாத அவதி அடைந்து வருகிறோம். எனவே, எங்களின் நிலையை உணர்ந்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதேபோல கமுதி தாலுகா கே.வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் 500 வீடுகள் உள்ள நிலையில் கடந்த பல மாதங்களாக குடிநீருக்காக அலையாய் அலைந்து வருகிறோம். குடிநீருக்காக நாள்தோறும் குறிப்பிட்ட தொகை செலவழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எங்கள் கிராமத்தில் உள்ள கண்மாயில் பழைய கிணறில் நல்ல தண்ணீர் ஊற்று உள்ளது. இதனை பயன்படுத்தி அருகில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் புதிய ஆழ்குழாய் போட்டு கொடுத்தால் கிராம மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.


Next Story