திருப்பூரில் பயங்கரம்: தையல் தொழிலாளி குத்திக்கொலை போலீசார் விசாரணை


திருப்பூரில் பயங்கரம்: தையல் தொழிலாளி குத்திக்கொலை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 8 May 2019 5:00 AM IST (Updated: 7 May 2019 10:38 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் தையல் தொழிலாளி கொடூரமாக குத்திக்கொலை செய்யப்பட்டார்.

திருப்பூர்,

திருப்பூர் செரங்காடு 3–வது வீதி 14–வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40). இவர் பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சரஸ்வதி (35). இவர்களுடைய மகன் பிரனேஷ் (10). கணவன்– மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சரஸ்வதி தனது மகன் பிரனேசை அழைத்துக்கொண்டு கோவையில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

சிவக்குமாருக்கு சொந்தமாக தரை தளத்தில் 3 வீடுகளும், மாடியில் ஒரு வீடும் என மொத்தம் 4 வீடுகள் உள்ளன. அதில் மாடி வீட்டில் சிவக்குமாரின் தாயார் ரத்தினம்மாள், சிவக்குமாரின் தம்பி ரமேசுடன் வசித்து வருகிறார். தரை தளத்தில் உள்ள ஒரு வீட்டில் சிவக்குமார் வசித்து வந்தார். மற்ற 2 வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். சிவக்குமார் அடிக்கடி மது குடித்து விட்டு அந்த பகுதியில் உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 5–ந் தேதி ரத்தினம்மாள், பலவஞ்சிப்பாளையத்தில் வசித்து வரும் மகளுடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விட்டார். இதனால் ரமேசும் வீட்டை விட்டு சென்று தனது தங்கையின் வீடான பலவஞ்சிப்பாளையத்தில் தங்கினார். இதனால் செரங்காடு பகுதியில் உள்ள வீட்டில் சிவக்குமார் மட்டுமே இருந்து வந்தார். இந்த நிலையில் கோவிலுக்கு சென்று இருந்த ரத்தினம்மாள் நேற்று காலை பலவஞ்சிப்பாளையம் வந்தார். இதையடுத்து ரத்தினம்மாளை அங்கிருந்து ரமேஷ் செரங்காட்டிற்கு அழைத்து சென்றார். அப்போது சிவக்குமார் தங்கி இருந்த வீட்டின் கதவு பூட்டாமல் சாத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து மகனை பார்ப்பதற்காக கதவை தள்ளிக்கொண்டு ரத்தினம்மாள் உள்ளே சென்றார். அப்போது வீட்டுக்குள் குடல் சரிந்த நிலையில், உடம்பு முழுவதும் கத்திக்குத்து காயங்களுடன் சிவக்குமார் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இதை பார்த்ததும் ரத்தினம்மாள் அதிர்ச்சியடைந்து அழுது சத்தம் போட்டார். அவருடைய அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். பின்னர் இது குறித்து திருப்பூர் ஊரக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று சிவக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீஸ் மோப்ப நாய் வெற்றி வரவழைக்கப்பட்டது. அந்த மோப்பநாய் சிவக்குமாரின் பிணம் கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் தடயவியல் நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கிடைத்த தடயங்கள் மற்றும் கைரேகைகளை பதிவு செய்தனர். மர்ம ஆசாமிகள் சிவக்குமாரை கத்தியால் கொடூரமாக குத்திக்கொலை செய்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த கொலை குறித்து திருப்பூர் ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் மதுகுடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சிவக்குமார் அடிக்கடி மற்றவர்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்து இருப்பதும், தெரியவந்தது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது சிவக்குமாருக்கும் அவருடைய வீட்டில் குடியிருக்கும் ஒருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா?

தாராபுரம் ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே செயல்பட்டு வரும் பாரில் சிவக்குமாருக்கும், அங்கு இருந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது, அதன் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணமா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள். திருப்பூரில் தையல் தொழிலாளி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story