ஊட்டி தங்கும் விடுதியில் அ.ம.மு.க. பிரமுகர் தற்கொலை, போலீசார் விசாரணை
ஊட்டி தங்கும் விடுதியில் அ.ம.மு.க. பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள மசினகுடியை சேர்ந்தவர் முஜிப் ரகுமான் (வயது 46). இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் மசினகுடி ஊராட்சி செயலாளராக பதவி வகித்து வந்தார். அவருக்கு திருமணம் ஆகவில்லை. ரகுமான் மசினகுடியில் ஒரு காட்டேஜியை நிர்வகித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ரகுமான் தனது காரை பழுது பார்ப்பதற்காக ஊட்டியில் எட்டின்ஸ் சாலையில் உள்ள ஒரு ஒர்க்ஷாப்புக்கு வந்து உள்ளார். அதே பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் கடந்த 2 நாட்களாக தங்கி இருந்தார்.
இதற்கிடையே நேற்று காலையில் விடுதி பணியாளர்கள், ரகுமான் தங்கி இருந்த அறையின் கதவை தட்டினர். ஆனால், கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து ஊழியர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது ரகுமான் தூக்கில் பிணமாக தொங்கினார். உடனடியாக இதுகுறித்து விடுதி மேலாளர் ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார், கிராம நிர்வாக அலுவலர் சாம்சன் முன்னிலையில் அறையின் பூட்டு உடைத்து, பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த ரகுமான் சட்டை பையில் ஒரு சீட்டை போலீசார் கைப்பற்றினர். அதில் அவரது பெயர், முகவரி, செல்போன் எண், மசினகுடி போலீஸ் நிலைய தொலைபேசி எண், உறவினர்களுடைய செல்போன் எண் குறிப்பிடப்பட்டது. மேலும் பூர்த்தி செய்யப்படாத வெற்று காசோலையும் இருந்தது.
அ.ம.மு.க. பிரமுகர் ரகுமான் கடன் தொல்லையால் தற்கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் பிரமுகர்கள் 2 பேர் ஏரியில் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.