அரவக்குறிச்சி அருகே பரபரப்பு, நோயாளியை ஏற்றிச்சென்றபோது தீப்பிடித்து எரிந்த ஆம்புலன்ஸ் - அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்ப்பு
அரவக்குறிச்சி அருகே நோயாளியை ஏற்றிச்சென்றபோது ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
அரவக்குறிச்சி,
கரூர் மாவட்டம் அரவக் குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு வருகிற 18-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் நேற்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். இதனால் இந்த தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள் பரபரப்பாக காணப்படுகிறது.
இந்நிலையில் பள்ளப் பட்டியை சேர்ந்தவர் குமரேசன்(வயது 50). இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, அரவக்குறிச்சியில் உள்ள 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த 108 ஆம்புலன்சில், அவரை ஏற்றி அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
குமரன்வலசு மின் நிலையம் அருகில் வேகத்தடையை தாண்டி சென்றபோது, ஆம்புலன்ஸ் வேனில் உள்ள என்ஜினில் இருந்து திடீரென புகை கிளம்பியது. தொடர்ந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் சுதாரித்துக்கொண்ட டிரைவர் உடனடியாக வேனை நிறுத்தினார். அதில் இருந்து நோயாளி குமரேசனை அவருடைய உறவினர்கள் உடனடியாக கீழே இறக்கி அருகில் உள்ள கோவிலில் தங்க வைத்தனர். மேலும் வேனில் இருந்த 2 நர்சுகள் உடனடியாக கீழே இறங்கினர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்நிலையில் வேனில் பற்றிய தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இது பற்றி தகவல் அறிந்த அரவக்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள், அலுவலர் பச்சமுத்து தலைமையில் உடனடியாக அங்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனால் ஆம்புலன்சின் முன்பகுதி முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஓடும் ஆம்புலன்ஸ் தீப்பிடித்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story