மணப்பாறை அருகே, குடிநீர் கேட்டு அரசு பஸ் சிறைபிடிப்பு
மணப்பாறை அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.
மணப்பாறை,
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மரவனூர் அருகே உள்ள சமுத்திரம் கிராமத்தில் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே காவிரி குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீரும் முறையாக வினியோகிக்கப்படுவதில்லை. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி கிராம மக்கள் நேற்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கிளை செயலாளர் மாசிலாமணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் பாலு ஆகியோர் தலைமையில் சமுத்திரத்தில் உள்ள சாலையில் கூடினர். பின்னர் அவர்கள் அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து உரிய உத்தரவாதம் அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் வருவார்கள் என்று கூறியதை அடுத்து மக்கள் சிறைபிடித்த பஸ்சை விடுவித்து போராட்டத்தை கைவிட்டு ஓரமாக நின்றனர்.
பின்னர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். கொளுத்தும் வெயிலிலும் குடிநீருக்காக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story