கொலை வழக்கில் தொழிலாளிக்கு விதித்த இரட்டை ஆயுள் தண்டனையை மதுரை ஐகோர்ட்டு உறுதி செய்தது


கொலை வழக்கில் தொழிலாளிக்கு விதித்த இரட்டை ஆயுள் தண்டனையை மதுரை ஐகோர்ட்டு உறுதி செய்தது
x
தினத்தந்தி 7 May 2019 10:30 PM GMT (Updated: 2019-05-08T01:53:38+05:30)

கொலை வழக்கில் கூலித்தொழிலாளிக்கு விதித்த இரட்டை ஆயுள் தண்டனையை மதுரை ஐகோர்ட்டு உறுதி செய்தது.

மதுரை,

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் டேவிட்சன். அதே பகுதியை சேர்ந்தவர் தங்கப்பன். இவர்கள் இருவரும் சேர்ந்து கூலி வேலைக்கு சென்று வந்துள்ளனர். சில நாட்கள் தங்கப்பன் மட்டும் தனியாக வேலைக்கு சென்றுள்ளார். இந்தநிலையில் 2013–ம் ஆண்டு தங்கப்பன் வீட்டுக்கு டேவிட்சன் சென்றுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த டேவிட்சன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தங்கப்பனை சரமாரியாக குத்தினார். இதை பார்த்ததும் அவரது மனைவி கூச்சலிட்டார். அவரையும் டேவிட்சன் கத்தியால் தாக்கியுள்ளார். பின்னர் அக்கம்பக்கத்தை சேர்ந்தவர்கள் வந்து டேவிட்சனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தங்கப்பனை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து தக்கலை போலீசார் கொலை வழக்குபதிவு செய்து டேவிட்சனை கைது செய்தனர்.

இந்த வழக்கு கன்னியாகுமரி மாவட்ட செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. முடிவில், டேவிட்சன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு இந்திய தண்டனைச்சட்டம் 449–வது பிரிவின்கீழ் ஒரு ஆயுள்தண்டனையும், 302–ன்கீழ் ஒரு ஆயுள்தண்டனையும் என இரட்டை ஆயுள்தண்டனை வழங்கி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் அவர் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவில், தங்கப்பனை தாக்கிய சமயத்தில் மனுதாரர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். எனவே அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில், மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகள் உரிய ஆவணங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே மனுதாரருக்கு விதித்த இரட்டை ஆயுள் தண்டனையை உறுதி செய்கிறோம் என்றும், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story