திராவிட கட்சிகளிடம் இருந்து நாட்டையும், மக்களையும் காப்பாற்ற வேண்டும் மதுரையில் சீமான் பேச்சு
திராவிட கட்சிகளிடம் இருந்து நாட்டையும், மக்களையும் காப்பாற்ற வேண்டும் என மதுரையில் சீமான் கூறினார்.
நாகமலைபுதுக்கோட்டை,
மதுரை நாகமலைபுதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு, திருப்பரங்குன்றம் சட்டமன்றத்தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரேவதியை ஆதரித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழகத்தில் ஏழை மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளிகளில் கல்வித்தரம் போதுமானதாக இல்லை. பல பள்ளிகள் மூடப்படும் நிலையில், பல டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் அவலம் உள்ளது. தனியார் பள்ளிகளை நடத்துபவர்களால் தரமான கல்வியை வழங்க முடியும் எனில் அரசால் ஏன் முடியாது? கல்வி, மருத்துவம், குடிநீர், மின்சாரத்துறைகள் தனியார் மயமாக்கப்பட்டு வருகின்றன. இதை தகர்த்து மறுகட்டமைப்பு செய்யவேண்டியது அவசியம். அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு, மாணவர்கள் விரும்பி வந்து சேரும் நிலையை உருவாக்குவது அரசின் கடமை. நீர்த்தேக்கங்கள், ஊருணிகளை பாதுகாப்போம் என்று எந்த கட்சியும் உறுதியளிக்கவில்லை. நம்மிடம் கார் இருக்கும். குடிநீர் இருக்காது. இதற்கு பெயர் வளர்ச்சி இல்லை. வறட்சி. கடந்த 50 ஆண்டுகளில் திராவிட கழக ஆட்சிகளில் உருவாக்கப்பட்ட ஏரி, குளங்கள் எத்தனை என்று கூற முடியுமா? ஏராளமான நீர் நிலைகள் கட்டிடங்களாக மாற்றப்பட்டது தான் அவர்களின் சாதனை.
ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்களால் எப்படி ஊழல், லஞ்சத்தை ஒழிக்க முடியும். ரூ.100 கோடி செலவு செய்து வெற்றி பெறுபவர்கள் எப்படி மக்கள் நலனைப்பற்றி கவலைப்படுவர்? நோட்டை கொடுத்து ஓட்டு வாங்குபவர்கள் பின்னர் நாட்டை விற்கின்றனர். கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் ஆற்று மணல் அல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு மக்கள் நலனின் அக்கறை உள்ளவர்கள் ஆட்சி செய்கின்றனர். ஆனால் இங்குள்ளவர்கள் ஆற்று மணலை அண்டை மாநிலத்திற்கு கடத்துகின்றனர். கேரளாவில் காடுகள் அழிக்கப்படும் என்பதால் நான்கு வழிச்சாலை அமைக்க அனுமதிக்கவில்லை. தமிழகத்தில் நிலத்தடி நீரை உயர்த்தும் திட்டம் இல்லை. சிமெண்டு, தார் ரோடுகளில் தேங்கி மழைநீர் வீணாகிறது. தி.மு.க., அ.தி.மு.க.,வினர் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்கின்றனர். ஆனால் மக்கள் இவர்களுக்கே மாறி, மாறி ஓட்டுப்போடுகின்றனர். கேட்டால் வேறு வழியில்லை என்று கூறுகின்றனர். தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற்றால் ஸ்டாலினுடன் சேர்ந்து சட்டசபையில் வெளிநடப்பு செய்வார். அ.தி.மு.க., வேட்பாளர் வெற்றிபெற்றால் எடப்பாடி பழனிசாமி ஆட்சி மேலும் 6 மாதம் நீடித்திருக்கும்.
நாம் தமிழர் வேட்பாளர் ரேவதி வெற்றி பெற்றால் புரட்சி நிகழும். ஏழைகளும் தேர்தலில் வெற்றி பெறமுடியும் என்பதற்கான தொடக்க புள்ளியாக அமையம். டாக்டர் அம்பேத்கர் அதிகாரம் மிக வலிமையானது என்று கூறியுள்ளார். நாங்கள் அந்த அதிகாரம் மக்களுக்கானது என்கிறோம். எந்த கழகம் வந்தாலும் லஞ்சம், ஊழல், கனிமவள கொள்ளை நடக்கும். திராவிட கட்சிகளிடம் இருந்து நாட்டையும், மக்களையும் காப்பாற்ற வேண்டும். மாற்றம் மக்கள் மனதிலிருந்து வரவேண்டும். அரசியல் புரட்சியை திருப்பரங்குன்றம் என்ற மையப்புள்ளியில் இருந்து தொடங்கி வையுங்கள். விவசாயத்தை அரசு பணியாக மாற்ற வேண்டும். தமிழக அரசின் போக்குவரத்துத்துறை, மின்வாரியம் ஆகியவை நஷ்டத்தில் இயங்கவதாக கூறுகின்றனர்.
ஆனால் ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் வரை எப்படி வழங்க முடிகிறது. எங்களிடம் நிறைய திட்டங்கள் உள்ளன. அவற்றை செயல்படுத்த பணம் எங்கிருந்து வரும் என்று கேட்கின்றனர். கொள்ளையடித்து வைத்துள்ளவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தால் வரியே இல்லாத பட்ஜெட் போட முடியும். தமிழ் கற்றால் வேலை கிடைக்கும் என்ற நிலை வரவேண்டும். 4 தொகுதி இடைத்தேர்தல் மாற்றத்திற்கான தேர்தல். இந்த தேர்தல் மூலம் தூய தேசம், பாலியல் வன்முறை இல்லாத, சாதி பாகுபாடு இல்லாத நாடு உருவாகும். அனைத்தையும் மாற்றும் ஆற்றல் நமக்கு உள்ளது. ஆனால் வெற்றிதான் அதை தீர்மானிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.