திருப்பரங்குன்றம் தொகுதியில் தாக்கல் செய்த திருநங்கையின் வேட்புமனுவை ஏற்க கோரிய வழக்கு தள்ளுபடி


திருப்பரங்குன்றம் தொகுதியில் தாக்கல் செய்த திருநங்கையின் வேட்புமனுவை ஏற்க கோரிய வழக்கு தள்ளுபடி
x
தினத்தந்தி 8 May 2019 9:45 PM GMT (Updated: 8 May 2019 7:21 PM GMT)

திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த திருநங்கையின் வேட்புமனுவை ஏற்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

மதுரை மகால் பகுதியை சேர்ந்த திருநங்கை பாரதிகண்ணம்மா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு வருகிற 19–ந்தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட கடந்த 23–ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்தேன். இந்தநிலையில் வேட்பு மனு பரிசீலனை முடிவில், எனது மனுவை நிராகரித்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, வேட்பு மனு முறையாக பூர்த்தி செய்யப்படவில்லை. சில பகுதிகளில் நிரப்பப்படாமல் உள்ளதால், உங்கள் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

வேட்பு மனு தாக்கல் செய்தபோது, மனுவில் ஏதாவது விடுபட்டு இருந்தால் சொல்லுங்கள். பூர்த்தி செய்துவிடுகிறேன் என்று கேட்டேன். அந்த சமயத்தில் அவர்கள் எதுவும் சொல்லாமல் விட்டுவிட்டனர். எனவே எனது வேட்பு மனுவை நிராகரித்த உத்தரவை ரத்து செய்து, எனது மனுவை ஏற்றுக்கொண்டு, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட என்னை அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு விடுமுறை கால கோர்ட்டில் நேற்று நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.தண்டபாணி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் பகவதி ஆஜராகி, “மனுதாரர் ஏற்கனவே சில தேர்தல்களில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்த வேட்புமனுக்களும் இதேபோல் தள்ளுபடியாகி உள்ளன. விளம்பரத்துக்காக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். தேர்தல் விதிகளின்படி அவரது வேட்புமனுவை 10 பேர் முன்மொழியாததால் தான், நிராகரிக்கப்பட்டுள்ளது“ என்று வாதாடினார்.

முடிவில், இந்த விவகாரத்தில் இந்த கோர்ட்டு தலையிட இயலாது. தேர்தல் நடைமுறைகள் முடிந்த பின்னர், மனுதாரர் தனது கோரிக்கையை தேர்தல் வழக்காக தாக்கல் செய்யலாம். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story