மகனை ஜெயிக்க வைப்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் சொன்னதால் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பப்பட்டதா? ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கேள்வி


மகனை ஜெயிக்க வைப்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் சொன்னதால் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பப்பட்டதா? ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கேள்வி
x
தினத்தந்தி 8 May 2019 10:30 PM GMT (Updated: 8 May 2019 7:59 PM GMT)

மகனை ஜெயிக்க வைப்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் சொன்னதால் தேனிக்கு வாக்குப்பதிவு எந்திரங்களை தேர்தல் ஆணையம் அனுப்பி வைத்துள்ளதா? என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கேள்வி எழுப்பி உள்ளார்.

தேனி,

கோவையில் இருந்து தேனிக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு எந்திரங்கள் திடீரென கொண்டு வரப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து புகார் மனு அளிப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். கலெக்டரிடம் மனு அளித்த பின்பு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நடந்து முடிந்த தேர்தலில் எந்த வாக்குச்சாவடியிலும் மறுதேர்தல் நடத்த தேவையில்லை. தேர்தல் நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது. மறுதேர்தல் நடத்த வேண்டும் என்ற பேச்சுக்கே இடம் இருக் கக்கூடாது என்று கலெக்டரிடம் தெரிவித்தோம். மறுவாக்குப்பதிவு தேவை இல்லை என்று தான் தேர்தல் ஆணையத்திடம் சொல்லி இருப்பதாக கலெக்டர் எங்களிடம் தெரிவித்தார். கண்டிப்பாக இந்த வாக்குப்பதிவு எந்திரங்களை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும். இதுகுறித்து சென்னையில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் தி.மு.க. சார்பிலும் மனு கொடுக்கப்பட உள்ளது.

இந்த 50 வாக்குப்பதிவு எந்திரங்களை வைத்து முடிந்தால் ஏதாவது செய்யலாம் என்ற எண்ணத்தில் ஆளும் கட்சியினர் இருக்கலாம். துணை முதல்-அமைச்சர் மனதில் என்ன வைத்து இருக்கிறார் என்பதும், தேர்தல் ஆணையத்திடம் சொல்லி இவற்றை அனுப்பி இருக்கிறாரா? என்பதும் தெரியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் உண்மை. இதில், ஏதாவது தவறு நடந்தால் அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த பகுதியில் உள்ள மக்கள் கொந்தளிப்பார்கள்.

இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிடம் சொல்லி இருக்கிறோம். அவர் களும், டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் இது குறித்து சொல்வார்கள். வாக்குப்பதிவு எந்திரங்கள் ஏன் வந்தது? என்று கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டுவுக்கு தெரியாமல் இருக்கலாம். ஓ.பன்னீர்செல்வம் வாரணாசி சென்று இருந்த போது, மோடியின் காலில் விழுந்து தனது மகனை எப்படியாவது ஜெயிக்க வைக்குமாறு சொல்லி இருக்கலாம். யார் காலில் விழுந்தாலும், ஓ.பன்னீர்செல்வம் மகன் வெற்றி பெறப் போவது இல்லை. வரும் காலத்தில் ஓ.பன்னீர்செல்வமும் வெற்றி பெறப் போவது இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story