அந்தியூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் மரவள்ளிக்கிழங்கு-வாழைகள் நாசம்


அந்தியூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் மரவள்ளிக்கிழங்கு-வாழைகள் நாசம்
x
தினத்தந்தி 9 May 2019 4:48 AM IST (Updated: 9 May 2019 4:48 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன. இதில் மரவள்ளிக்கிழங்கு மற்றும் வாழைகள் நாசம் ஆனது.

அந்தியூர்,

அந்தியூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன. இதில் மரவள்ளிக்கிழங்கு மற்றும் வாழைகள் நாசம் ஆனது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதியில் யானை, சிறுத்தை, கரடி, மான் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. போதிய மழை இல்லாததால் வனப்பகுதியில் உள்ள மரம், செடி-கொடிகள் கருகிவிட்டன. மேலும் வனவிலங்குகளுக்கு தீவனம் மற்றும் தண்ணீர் வனப்பகுதியில் கிடைப்பதில்லை.

இதனால் வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமங்களுக்குள் புகுந்து விடுகின்றன. குறிப்பாக யானைகள் உணவு மற்றும் தண்ணீரைத்தேடி தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை தின்றும், மிதித்தும் நாசம் செய்து வருகிறது. இந்த நிலையில் அந்தியூர் வனப்பகுதியில் இருந்து 4 காட்டு யானைகள் நேற்று முன்தினம் வெளியேறின.

இந்த யானைகள் அந்தியூர் அருகே விராலிக்காட்டூர் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு தோட்டத்துக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள மரவள்ளிக்கிழங்குகளை சேதப்படுத்தின. மேலும் அந்த தோட்டத்தின் அருகே உள்ள மற்றொரு தோட்டத்தில் புகுந்த யானைகள் அங்கு பயிரிடப்பட்டு இருந்த வாழை மற்றும் மக்காச்சோள பயிர்களை தின்றதோடு காலால் மிதித்து நாசம் செய்தது.

இதைத்தொடர்ந்து அந்த யானைகள் தானாகவே தோட்டத்தில் இருந்து வெளியேறி விராலிக்காட்டூர் ரோட்டில் சுற்றித்திரிந்தன. இதனை வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி விவசாயிகள் கவனித்தனர். அதன்பின்னர், அந்த 4 யானைகளையும் விவசாயிகள் தீப்பந்தங்கள் காட்டி வனப்பகுதிக்கு விரட்டினர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், `அந்தியூர் வனப்பகுதியில் வன விலங்குகளுக்கு தேவையான குடிநீர் மற்றும் உணவுப் பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் யானைகள் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி விவசாய தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

யானைகள் மற்றும் வன விலங்குகள் விளைநிலங்களுக்குள் புகாமல் இருப்பதற்கு அகழி அமைப்பதோடு, மின்வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பயிர்களை இழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்` என்றனர்.



Next Story