ஆரணி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


ஆரணி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 10 May 2019 4:15 AM IST (Updated: 10 May 2019 12:58 AM IST)
t-max-icont-min-icon

ஆரணி அருகே மூதாட்டியின் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆரணி, 

ஆரணியை அடுத்த சதுப்பேரிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கன்னியம்மாள் (வயது 65). இவருடைய கணவர் பொன்னுசாமி ஏற்கனவே இறந்துவிட்டார். கன்னியம்மாள் தனது மகள் ஜீவிதாவுடன் வசித்து வருகிறார். ஜீவிதா தச்சூரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சத்துணவு அமைப்பாளராக வேலை செய்து வந்தார். தற்போது விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஜீவிதா ஆற்காடு அருகே உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால் வீட்டில் கன்னியம்மாள் மட்டும் இருந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று கன்னியம்மாள் வீட்டை பூட்டிக்கொண்டு தனது நிலத்துக்கு சென்றார். பின்னர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் பீரோ அருகில் இருந்த சாவியை எடுத்து மர்ம நபர்கள் பீரோவை திறந்து அதில் இருந்த 12 பவுன் நகைகள், ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து கன்னியம்மாள் களம்பூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் நகை, பணம் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
1 More update

Next Story