செஞ்சியில் சூறைக்காற்றுடன் மழை, கூரை வீட்டின் மீது, மரம் முறிந்து விழுந்ததில் சிறுமி பலி - தாய்-மகன் உள்பட 3 பேர் படுகாயம்
செஞ்சி பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழையால் மரம் முறிந்து கூரை வீட்டின் மீது விழுந்ததில் சிறுமி பலியானாள். மேலும் தாய், மகன் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.
செஞ்சி,
வெப்பசலனம் காரணமாக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று இரவு 7 மணிக்கு செஞ்சி பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழையின்போது புளிய மரம் முறிந்து அருகில் உள்ள கூரை வீட்டின் மீது விழுந்தது.
இதில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 6 வயது சிறுமி இடிபாட்டில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாள். மேலும் அவளது தாய், அண்ணன், பாட்டி ஆகிய 3 பேர் பலத்த காயமடைந்தனர்.
இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி திண்டிவனம் சாலை பகுதியை சேர்ந்தவர் குமார்(வயது 35). கூலி தொழிலாளி. இவருக்கு ஜெயந்தி(30) என்ற மனைவியும், கிஷோர்(9), கீர்த்தனா(6) என்ற 2 குழந்தைகளும் உள்ளனர். நேற்று மாலை குமார் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். ஜெயந்தி தனது குழந்தைகள் மற்றும் தாய் தனபாக்கியம்(60) ஆகியோருடன் வீட்டில் இருந்தார். அப்போது அப்பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் வீட்டின் அருகில் இருந்த புளிய மரம் ஒன்று முறிந்து குமார் வீட்டின் மீது விழுந்தது. இதில் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் ஜெயந்தி உள்ளிட்ட 4 பேரும் இடிபாட்டில் சிக்கி பலத்த காயமடைந்தனர். இதனால் ஜெயந்தி உள்ளிட்டோர் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அபயகுரல் எழுப்பினார்கள். இதைகேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து இடிபாட்டில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே இதுபற்றி தகவலறிந்த செஞ்சி போக்குவரத்து போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜெயந்தி உள்ளிட்ட 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கீர்த்தனா பரிதாபமாக உயிரிழந்தாள். ஜெயந்தி, கிஷோர், தனபாக்கியம் ஆகியோருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மழை காரணமாக மின்வாரியத்தினர் செஞ்சி பகுதியில் மின் வினியோகத்தை துண்டித்தனர். இதனால் இரவு 10 மணி வரை செஞ்சி நகரம் இருளில் மூழ்கி இருந்தது. இதேபோல் கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கச்சிராயப்பாளையம் பகுதிகளிலும் நேற்று இரவு சூறைக்காற்றுடன் மழை பெய்தது.
Related Tags :
Next Story