திருமங்கலம் ரெயில் நிலையம் அருகே ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே வந்த ரெயில்கள்; ஸ்டேஷன் மாஸ்டர்கள் உள்பட 3 பேர் பணி இடைநீக்கம்


திருமங்கலம் ரெயில் நிலையம் அருகே ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே வந்த ரெயில்கள்; ஸ்டேஷன் மாஸ்டர்கள் உள்பட 3 பேர் பணி இடைநீக்கம்
x

திருமங்கலத்தில் ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே ரெயில்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ரெயில்கள் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக ஸ்டேஷன் மாஸ்டர்கள் உள்பட 3 அலுவலர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

மதுரை,

மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை 5.15 மணிக்கு செங்கோட்டைக்கு பாசஞ்சர் ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் திருமங்கலம் ரெயில் நிலையத்துக்கு மாலை 5.45 மணிக்கு சென்றடைந்தது. அதனைத்தொடர்ந்து சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதமாக வந்ததால், மதுரை-செங்கோட்டை பாசஞ்சர் ரெயில் திருமங்கலம் ரெயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டது.

அதேபோல, கொல்லத்தில் இருந்து தாம்பரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் திருமங்கலம் ரெயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் இருந்துவந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சிக்னல் பழுது காரணமாக சிறிது நேரம் நிறுத்திவைக்கப்பட்டது. பின்னர், விதிமுறைகளை பின்பற்றி குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் விருதுநகருக்கு புறப்பட்டு சென்றது. கொல்லம்-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயிலும் மதுரை புறப்பட்டு சென்றது.

இதற்கிடையே, செங்கோட்டையில் இருந்து மதுரை வரும் பாசஞ்சர் ரெயில் கள்ளிக்குடி ரெயில்நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டது. 2 பாசஞ்சர் ரெயில்களும் நீண்ட நேரம் நிறுத்திவைக்கப்பட்டதால் பயணிகள் எரிச்சலடைந்து ரெயில்நிலைய அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதனைத்தொடர்ந்து குறைந்த வேகத்தில் ரெயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டது. கள்ளிக்குடியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மதுரை பாசஞ்சர் ரெயில் புறப்பட்டு திருமங்கலம் நோக்கி வந்துகொண்டிருந்தது. அதேசமயத்தில், திருமங்கலத்தில் இருந்து செங்கோட்டை செல்ல வேண்டிய பாசஞ்சர் ரெயிலும் புறப்பட்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த ரெயில் திருமங்கலம் ரெயில்நிலையம் அருகில் உள்ள ரெயில்வே கேட்டை கடந்தபோது, கள்ளிக்குடியில் இருந்து பாசஞ்சர் ரெயில் வந்துகொண்டிருப்பதாக ஸ்டேசன் மாஸ்டருக்கு தகவல் கிடைத்தது. ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரெயில்களும் எதிரெதிரே வந்துகொண்டிருந்தது. இதனால் பதற்றத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் ரெயிலை ரெயில்வே கேட் அருகே நிறுத்திவிட்டனர்.

ரெயில் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தால் திருமங்கலம் ரெயில்நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து மதுரை கோட்ட மேலாளர் அலுவலகத்தில் நேற்று சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் திருமங்கலம் ஸ்டேஷன் மாஸ்டர் ஜெயக்குமார், கள்ளிக்குடி ஸ்டேஷன் மாஸ்டர் சிவசிங்மீனா, இயக்க கட்டுப்பாட்டாளர் முருகானந்தம் ஆகிய 3 பேரையும் பணி இடைநீக்கம் செய்து கோட்ட மேலாளர் லெனின் உத்தரவிட்டார்.

Next Story