மீன்பிடி தடைகாலம் என்பதால் ஈரோட்டில் மீன்கள் விலை உயர்வு
மீன்பிடி தடைகாலம் என்பதால் ஈரோட்டில் மீன்கள் விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக வஞ்சிரம் மீன் கிலோ ரூ.900–க்கு விற்பனை ஆனது.
ஈரோடு,
ஈரோடு ஸ்டோனி பாலம் அருகில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 50–க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த மார்க்கெட்டுக்கு ராமேஸ்வரம், தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் இருந்து மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.
தற்போது மீன்கள் இனப்பெருக்க காலம் என்பதால், கடந்த ஏப்ரல் மாதம் 15–ந் தேதி முதல் வருகிற ஜூன் மாதம் 16–ந் தேதி வரை மீன்பிடி தடை காலம் ஆகும். இதனால் ஈரோட்டிற்கு மீன்கள் வரத்துக்கு குறைந்துள்ளது. இதன் காரணமாக அனைத்து மீன்களின் விலையும் உயர்ந்துள்ளது.
மீன்பிடி தடை காலத்திற்கு முன்பு வஞ்சிரம் மீன் கிலோ ரூ.600–க்கு விற்பனை ஆனது. ஆனால் நேற்று வஞ்சிரம் மீன் கிலோ ரூ.900–க்கு விற்பனை ஆனது. இதேபோல் ஈரோட்டில் நேற்று விற்பனையான மீன்களின் விலை கிலோவில் வருமாறு:–
மத்தி மீன் –ரூ.150, இறால் மீன் ரூ.450, நகர –ரூ.350, நண்டு –ரூ.380 சங்கரா –ரூ.300, பாறை –ரூ.380, சீலா –ரூ.350 அயர –ரூ.220, கெண்டை ரூ.250.
ஈரோடு மீன் மார்க்கெட்டை பொறுத்தவரை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அதிகமாக காணப்படும். அதன்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலையில் இருந்தே மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கி சென்றனர்.
இதேபோல் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ரோடு, பி.பி.அக்ரகாரம், சம்பத்நகர் ஆகிய இடங்களில் உள்ள மீன் மார்க்கெட்டிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் நேற்று மீன் விற்பனை மும்முரமாக நடந்தது.