வெண்ணாற்றில் மணல் அள்ளிய 4 மாட்டு வண்டிகள்–மினிலாரி பறிமுதல் 5 பேர் கைது


வெண்ணாற்றில் மணல் அள்ளிய 4 மாட்டு வண்டிகள்–மினிலாரி பறிமுதல் 5 பேர் கைது
x
தினத்தந்தி 13 May 2019 3:45 AM IST (Updated: 13 May 2019 2:55 AM IST)
t-max-icont-min-icon

வெண்ணாற்றில் மணல் அள்ளிய 4 மாட்டு வண்டிகள்–மினிலாரி பறிமுதல் செய்யப்பட்டதுடன் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை பகுதியில் உள்ள வெண்ணாறு, வெட்டாற்றில் அனுமதியின்றி மாட்டு வண்டிகளில் மணல் அள்ளப்பட்டு வருகிறது. வருவாய்த்துறையினர், போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தாலும் தொடர்ந்து ஆறுகளில் மணல் அள்ளப்படுகிறது. இந்தநிலையில் தஞ்சை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார், கூடலூர் சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி கொண்டு 2 மாட்டு வண்டிகள் வந்து கொண்டிருந்தன. இவற்றை பார்த்த போலீசார், அந்த மாட்டு வண்டிகளை வழிமறித்து தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது வெண்ணாற்றில் இருந்து மணல் அள்ளப்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 மாட்டு வண்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்து தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.


மேலும் இது தொடர்பாக மாட்டு வண்டி தொழிலாளர்களான கூடலூர் மேலதெருவை சேர்ந்த கிரி(வயது26), கோவிந்தராஜ்(58) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். பள்ளியக்கிரஹாரம் பகுதியில் கிழக்கு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது வெண்ணாற்றில் இருந்து 2 மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றப்பட்டு வந்தது. இந்த வண்டிகளை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக பள்ளியக்கிரஹாரம் பகுதியை சேர்ந்த அன்பழகன்(52), மோகன்(44) ஆகியோரை கைது செய்தனர். தஞ்சை தாலுகா போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது மினி லாரியில் மணல் ஏற்றி வந்த தஞ்சை பர்மாகாலனியை சேர்ந்த வீரமணியையும் கைது செய்தனர்.

ஆறுகளில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் அள்ள தி.மு.க. ஆட்சி காலத்தில் அனுமதி சீட்டு வழங்கப்பட்டு வந்தது. இதனால் ஆறுகளில் மணல் அள்ளி அதை விற்பனை செய்து தொழிலாளர்கள் வருமானத்தை ஈட்டி வந்தனர். தற்போது அனுமதி சீட்டு வழங்கப்படும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்ததைபோல் மீண்டும் அனுமதி சீட்டு வழங்க வேண்டும் என மாட்டு வண்டி தொழிலாளர்கள் வலியுறுத்தினர்.

Next Story