வனப்பகுதியில் ஏற்பட்ட வறட்சியால் விளைநிலங்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகள்


வனப்பகுதியில் ஏற்பட்ட வறட்சியால் விளைநிலங்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகள்
x
தினத்தந்தி 12 May 2019 10:24 PM GMT (Updated: 12 May 2019 10:24 PM GMT)

வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால், விளைநிலங்களில் காட்டுயானைகள் புகுந்து அட்டகாசம் செய்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் அச்சமடைந்த நிலையில் கவலையில் உள்ளனர்.

வத்ராயிருப்பு,

மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதியாக உள்ளது வத்திராயிருப்பு. எங்கும் பசுமையாக காணப்படும் இந்த பகுதியில் விவசாயிகள் மழை, கிணற்று பாசனம் மூலம் பல்வேறு விவசாயப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் சமீபத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தும், மழையும் பொய்த்து போனாதால் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது.

இந்த மலையின் வனப்பகுதியில் மான், யானை உள்ளிட்ட பல்வேறு காட்டு விலங்குகள் உள்ளன. இவை மழை பெய்து செழிப்பாக இருக்கும் காலங்களில் வனத்தை விட்டு வெளியில் வருவதில்லை. ஆனால் வறட்சி காலங்களில் இந்த விலங்குகள் வனத்தை விட்டு வெளியில் வந்து மலையின் அடிவார கிராமங்களுக்குள் புகுந்து விடுகின்றன. மேலும் விலங்குகள் கிராமத்தில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து அங்குள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்தநிலையில் வத்ராயிருப்பு அருகே உள்ள ஒரு தனியார் தோப்பில், வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு யானைகள் புகுந்தன. அவை அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை, மா, தென்னை உள்ளிட்டவைகளை சேதப்படுத்தின. மேலும் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப்பகுதியான பிளவக்கல் அணை வண்ணாபாறை பகுதியில் அப்துல் மஜீது என்பவரின் தோட்டத்தில் சுமார் 8 ஏக்கரில் வாழை, தென்னை, மா ஆகியவற்றை விவசாயம் செய்து வருகிறார்.

இந்த தோட்டத்தில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக புகுந்து வாழைகள், தென்னை, மா மரங்களை சேதப்படுத்திவிட்டு சென்றன. காட்டு யானைகள் சாப்பிடுவதை விட சேதப்படுத்துவது தான் அதிக அளவு உள்ளது. இதனால் விவசாயிகள் அச்சமடைவதுடன், கவலையில் உள்ளனர். வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்கக் வேண்டும் எனவும், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story