தொண்டர்கள் விசுவாசத்தை காட்டி, அ.தி.மு.க.வை வெற்றி பெறச்செய்யுங்கள் நடிகை விந்தியா பேச்சு


தொண்டர்கள் விசுவாசத்தை காட்டி, அ.தி.மு.க.வை வெற்றி பெறச்செய்யுங்கள் நடிகை விந்தியா பேச்சு
x
தினத்தந்தி 12 May 2019 10:30 PM GMT (Updated: 12 May 2019 10:25 PM GMT)

தொண்டர்கள் விசுவாசத்தை காட்டி, அ.தி.மு.க.வை வெற்றி பெறச்செய்யுங்கள் என்று திருப்பரங்குன்றம் தொகுதி பிரசாரத்தின்போது நடிகை விந்தியா கூறினார்.

மதுரை,

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலையொட்டி அந்த தொகுதிக்கு உட்பட்ட தனக்கன்குளம், நிலையூர், விளாச்சேரி பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து அ.தி.மு.க. பேச்சாளரும், நடிகையுமான விந்தியா நேற்று வாகன பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:–

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஏழைகளின் இருளை போக்க மாதந்தோறும் 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்கினர். பரதன் ஆண்டாலும் அது ராம ராஜ்ஜியமாக தான் இருந்தது. அதுபோல தற்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தை ஆட்சி செய்தாலும் அது ஜெயலலிதா ஆட்சியாகத்தான் உள்ளது. நமது கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற நடப்பது இந்த தேர்தல். தொண்டர்கள் அனைவரும் நம்முடைய விசுவாசத்தை இந்த தேர்தலில் காட்டி கட்சியை வெற்றி பெற செய்ய வேண்டும்.

சேது சமுத்திரத்திட்டம், நிலக்கரி, 2ஜி ஸ்பெக்ட்ரம் என பஞ்ச பூதங்களில் ஊழல் செய்த ஆட்சி தி.மு.க. ஆட்சி. அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கெயில், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வந்து மீண்டும் விவசாயிகள் தற்கொலை செய்யது கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கிவிடுவார்கள்.

தேர்தல் வந்தால் மட்டும் தி.மு.க.வினருக்கு இந்துக்கள் மேல் கரிசனம் வந்துவிடுகிறது. கிராமந்தோறும் கிராமசபை கூட்டங்களை நடத்துவது, சாலையில் நடப்பது, டீ குடிப்பது, சைக்கிள் ஓட்டுவது, பெண்கள் மீது கரிசனம் என பல்வேறு வகையில் மக்களை ஏமாற்ற நடிக்கின்றனர். ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் மக்களை கண்டு கொள்ளமாட்டார்கள்.

தற்போது நடைபெற்ற தேர்தலில் தோற்றுவிடுவோம் என்று தி.மு.க.விற்கு பயம் வந்துவிட்டது. அதனால் தான் வாக்குப்பதிவு எந்திரம் கோளாறு எனக் கூறி மக்களை குழப்புகின்றனர். நடிகை நயன்தாரா குறித்து ராதாரவி பேசியதற்கு அவரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர். ஆனால் இதுபோல ஏற்கனவே நடந்த பல சம்பவங்களுக்கு அவர்கள் குரல் கொடுக்காதது ஏன்?. இந்த தேர்தலில் உங்களது அன்பை வாக்குகளாக மாற்றி அ.தி.மு.க. வேட்பாளர் முனியாண்டியை வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story