வேட்பாளர் பட்டியலில் குளறுபடி: அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் இருந்து விலகுவதாக சுயேச்சை வேட்பாளர் மனு


வேட்பாளர் பட்டியலில் குளறுபடி: அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் இருந்து விலகுவதாக சுயேச்சை வேட்பாளர் மனு
x
தினத்தந்தி 14 May 2019 4:30 AM IST (Updated: 14 May 2019 12:23 AM IST)
t-max-icont-min-icon

வேட்பாளர் பட்டியலில் குளறுபடி ஏற்பட்டதால் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் இருந்து விலகுவதாக சுயேச்சை வேட்பாளர் மனு அளித்து விட்டு, உண்ணாவிரதமும் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அரவக்குறிச்சி,

கரூர் மாவட்டம், அரவக் குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மும்முரமாக வாக்கு சேகரித்து வருகிறார்கள். இந்த தொகுதியில் அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி சார்பாக வேட்பாளர் இரமேஷ் போட்டியிடுகிறார்.

இந்தநிலையில் வேட்பாளர் பட்டியலில் இவரது பெயர் அகர வரிசைப்படி 4-வது இடத்தில் இருந்தது. தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதிப்பட்டியலில் இவரது பெயரின் முதல் எழுத்தான ‘இ’ நீக்கப்பட்டு ரமேஷ் என்று குறிப்பிட்டு 9-வது இடத்தில் இடம் பெற்றிருந்தது. இதனை கண்டித்து கடந்த 10-ந்தேதி இரமேஷ் அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன்பு காந்திவேடத்தில் தரையில் உருண்டு போராட்டம் நடத்தினார்.

இந்தநிலையில் நேற்று காலை இரமேஷ் திடீரென அரவக்குறிச்சி தாலுகா அலுலகத்திற்கு வந்து, தேர்தல் நடத்தும் அதிகாரி மீனாட்சியிடம் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியலை தமிழ் அகர வரிசைப்படி அமைக்க வேண்டும். அவ்வாறு அமைக்க தமிழ் மொழியில் எனது பெயரை தவறாக நான் குறிப்பிட்டிருந்தால், உடனடியாக எனது வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும்.

மேலும் மேற்கூறிய வகையில் அல்லாமல், அரவக்குறிச்சி தேர்தல் அதிகாரியாகிய தாங்கள் தமிழ் மொழியினை அலட்சியப்படுத்துவதாக இருந்தால் அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி சார்பாகவும், வேட்பாளர் என்ற வகையில், தமிழ் மொழிக்கும், தமிழுக்கும் மதிப்பளித்து தமிழ் மொழியை காப்பதற்காக இந்தத் தேர்தலில் இருந்தே முழுவதுமாக விலகி கொள்கிறேன்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

பின்னர் அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த அவர் தாலுகா அலுவலகம் முன்பு மாலை வரை உண்ணாவிரதம் இருந்து விட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றார். சுயேச்சை வேட்பாளர் தேர்தலில் விலகுவதாக மனு அளித்த சம்பவம் அரவக்குறிச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story